2011 மே 9 முதல் 2012 மே 16 வரை

பொதுப் பலன்கள்

உழைக்கத் தயங்காமல் உண்மையாகவும் நிம்மதியாகவும் வாழ விரும்புவோரின் குருவாக இருப்பவர் குருபகவான்தான். புத்தி கூர்மையையும் பேச்சு வன்மையையும் வேத விற்பன்னத்தையும் அளிப்பவரும் குருபகவானே. பதவியை பகட்டாக நினைக்காமல் பொறுப்பாகக் கருதி மக்களின் நலனுக்காக உழைப்போருக்கு நலம் செய்வதும் குருபகவான்தான். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சமமெனக் கருதி ஒருமித்து வாழ உறுதுணையாக இருப்பவர் குருபகவானே. சிகரம் தொட்டாலும் சிந்தனையில் பெற்றோரையும் மற்றோரையும் மதிப்போருக்கு மரியாதை செய்ய விரும்புவரும் குருபகவான்தான்.

நிகழும் கர வருடம், சித்திரை மாதம் 25-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை (2011 மே 9) சுக்ல பட்சத்து சஷ்டி திதியில் புனர்பூசம் நட்சத்திரம், சூலம், நாமயோகம், தைத்துலம் நாமகரணம், நேத்திரம் ஜீவனுள்ள சித்தயோகத்தில், குரு ஹோரையில், சூரியன் உதயம் புக, பெயர்ச்சி நாழிகை 48-க்கு சரியான நேரம் பின்னிரவு மணி 1.12-க்கு உபய வீடான மீனத்திலிருந்து சர வீடான மேஷத்துக்குள் குருபகவான் நுழைகிறார்.

வேதம், ஞானம், அறிவியல் ஆகியவற்றுக்கு உரிய கிரகமான குருபகவான் 2012 மே 16 வரை மேஷ ராசியில் ஆட்சி செலுத்துவார். சட்டம் ஒழுங்குக்கு அதிபதியான அங்காரகனின் வீடான மேஷத்தில் குரு அமர்வதால், காவல்துறை களங்கமற்றுச் செயல்படும். அதனால் வன்முறையும் குற்றங்களும் குறையும். நீதிமன்றங்களின் நியாயம் வலுவடையும். சுற்றுச்சூழல் சட்டங்களின் மூலம் புவியைக் காக்கும் நடவடிக்கைகள் தீவிரமடையும். செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாற்று மின்சார முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும்.

கர வருடம் ஆவணி 21 (2011 செப்டம்பர் 7) முதல் பரணி முதல் பாதத்தில் அதிசார கதியில் சஞ்சரித்து பின் மார்கழி 9 (2011 டிசம்பர் 25) அன்று அசுவினி நட்சத்திரத்துக்கு திரும்புகிறார். தான் நின்ற ராசியில் இருந்து 5, 7, 9-ம் பார்வையால் மீனம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு ராசியினருக்கு சுப பலன்களையும், ரிஷபம், கன்னி ராசியினருக்கு குறைவான சுப பலன்களையும், மேஷம், கடகம், விருச்சிகம், மகரம், கும்ப ராசியினருக்கு மத்திம பலன்களையும் அளிக்கிறார்.

மே 10 முதல் ஜூன் 4 வரை சுக்கிரன், குருவுடன் இணைந்திருப்பதால் தனுர் ராசியினர் பூர்வ புண்ணிய, சுக சௌக்கிய லாபங்களையும், மிதுன ராசியினர் தொழில் மேன்மையையும், சிம்ம ராசியினர் புத்தி லாபத்தையும் பெறுவர். நட்பு வீடான மேஷ ராசியில் குரு சஞ்சரித்து, பகை வீடான துலாமை 7-ம் பார்வையால் பார்ப்பதால் துலாம் ராசியினர் குடும்ப நலனையும் திருமண பாக்கியத்தையும் மதிப்பையும் எதிர்பார்க்கலாம். குருபகவான் நட்பு வீடான சிம்மத்தையும் பகைவீடான துலாத்தையும், ஆட்சி வீடான தனுசையும் பார்ப்பதால் அவரது பார்வை சமமாகவே எல்லா ராசிகளிலும் பரிமளிக்கிறது.

குருவின் மீது 2011 டிசம்பர் 21 முதல் 2012 மே 16 வரை சனியின் பார்வை விழுவதாலும் 2011 நவம்பர் 4 முதல் 2012 ஜுன் 23 வரை செவ்வாய், சிம்மத்திலேயே அமர்வதாலும், வேளாண்மை குறையும் என்பது வருந்தத்தக்க விஷயமே. ரியல் எஸ்டேட் விலை அதிகரித்தாலும் அத்தொழில் புரிவோருக்கு சாதகமில்லை. சில கட்டுமானப் பொருட்களின் விலை குறையும். காட்டுத்தீ, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும். உலகெங்கும் ராணுவச் செலவுகள் அதிகரிக்கும்.

குருபகவான் 2011 செப்டம்பர் 7 முதல் 2011 டிசம்பர் 14 வரை வக்கிரமடைவதால் தங்கத்தின் விலை மேலும் மேலும் உயரும். உலகை அச்சுறுத்தும் நோய்கள் மீண்டும் வர வாய்ப்புண்டு. விவசாய உற்பத்தி குறையும். போலி ஆன்மிகவாதிகளை மக்கள் புறக்கணிப்பார்கள். உண்மையான ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மாற்று மருத்துவ முறைகள், இயற்கை உணவில் மக்கள் நாட்டம் கொள்வார்கள். மொத்தத்தில் இக்குருப்பெயர்ச்சி உரிமைப்போராட்டத்துக்கு ஆதரவளிக்கும். அடக்குமுறையை எதிர்க்கும். புவி பாதுகாப்பில் அக்கறை செலுத்தும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம் இது…

அசுவனி முதல் பாதத்தில் 2011 மே 9 முதல் மே 23 வரை.
அசுவனி இரண்டாம் பாதத்தில் 2011 மே 24 முதல் ஜுன் 8 வரை.
அசுவனி மூன்றாம் பாதத்தில் ஜுன் 9 முதல் ஜுன் 27 வரை.
அசுவனி நான்காம் பாதத்தில் ஜுன் 28 முதல் ஜுலை 21 வரை.
பரணி முதல் பாதத்தில் இயல்பு நிலையாக 2011 ஜுலை 22 முதல் செப்டம்பர் 6 வரை.
பரணி இரண்டாம் பாதத்தில் வக்கிர நிலையாக 2011 செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 10 வரை.
அசுவனி நான்காம் பாதத்தில் வக்கிர நிலையாக அக்டோபர் 11 முதல் நவம்பர் 4 வரை.
அசுவனி மூன்றாம் பாதத்தில் வக்கிர நிலையாக நவம்பர் 5 முதல் டிசம்பர் 9 வரை.
அசுவனி இரண்டாம் பாதத்தில் வக்கிர நிலையாக டிசம்பர் 10 முதல் டிசம்பர் 14 வரை.
அசுவனி இரண்டாம் பாதத்தில் இயல்பு நிலையாக 2011 டிசம்பர் 15 முதல் 2012 ஜனவரி 3 வரை.
அசுவனி மூன்றாம் பாதத்தில் 2012 ஜனவரி 4 முதல் பிப்ரவரி 9 வரை.
அசுவனி நான்காம் பாதத்தில் 2012 பிப்ரவரி 10 முதல் மார்ச் 1 வரை.
பரணி முதல் பாதத்தில் 2012 மார்ச் 2 முதல் மார்ச் 19 வரை.
பரணி இரண்டாம் பாதத்தில் 2012 மார்ச் 20 முதல் ஏப்ரல் 3 வரை.
பரணி மூன்றாம் பாதத்தில் 2012 ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 16 வரை.
பரணி நான்காம் பாதத்தில் 2012 ஏப்ரல் 17 முதல் மே 1 வரை.
கிருத்திகை முதல் பாதத்தில் 2012 மே 2 முதல் மே 16 வரை.

பரிகாரம் என்ன?

  • சொத்து பிரச்னைகளை கூடிய வரை சச்சரவுகள் இன்றி சுமுக தன்மையுடன் முடித்துக்கொள்வது நல்லது.
  • குடும்ப உறவுகளுடன் அனுசரணை அவசியம்.
  • நேர்வழியே நிலைக்கும்… குறுக்குவழி சிதைக்கும்.
  • செவ்வாய் அதிகபதியான முருகப்பெருமானை வழிபடுங்கள்.
  • ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானமும் சேவை அமைப்புகளில் ரத்ததானமும் செய்யுங்கள்.
  • அன்பையும் அறிவையும் போதித்தால் அனைவருக்கும் சுகமே!