குழந்தை : பூவே பூவே புதுப்பூவே! – நீ
பொழுது விடிந்ததும் ஏன்பூத்தாய்?
பூ: வாவா குழந்தாய் சொல்கின்றேன் – நல்ல
வாசம் கொடுக்க நான்பூத்தேன்.

குழந்தை: பூவே பூவே புதுப்பூவே – நீ
புதுப்புது நிறங்கள் ஏன்படைத்தாய்?
பூ: ஆவல் கொண்ட உலகிற்கே – நான்
அழகு கொடுக்க நிறம்படைத்தேன்.

குழந்தை : பூவே பூவே புதுப்பூவே – நீ
புதுச்சுவைத் தேனை ஏன்கொடுத்தாய்?
பூ: கூவித் திரியும் வண்டெல்லாம் – வந்து
குடித்து மகிழத் தேன்கொடுத்தேன்.

குழந்தை : உனக்கிங்(கு) உதவி யார் செய்தார் - நீ
உதவி பிறருக்(கு) ஏன்செய்தாய்?
பூ: எனக்கிங்(கு) இறைவன் உதவிசெய்தான் – அதை
எண்ணிப் பிறார்க்கு நான்செய்தேன்.

- கவிஞர் பண்ணுருட்டி பரமசிவன்