அமெரிக்க சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியாக ஒபாமா வந்த போது உலகில் உள்ள கறுப்பின மக்களையெல்லாம் உருக வைத்த சக்தி! அமெரிக்க மண்ணில் மரித்த மைக்கல் ஜக்சனுக்காக உலகின் எங்கெங்கெல்லாமோ இருந்த மக்களை கண்ணீர் சிந்தி அழ வைத்த சக்தி! தேசம் விட்டு தேசம் வந்தபோதும் சொந்த மக்களின் துயரங்களை தோளில் சுமந்து உலகத்து தமிழரை ஒன்றுபட வைத்த சக்தி! இருந்தும் இன்னும் எமக்குள் தூங்கும் அந்த மகத்தான சக்தி எது தெரியுமா? அதுதான் அன்பு எனும் சக்தி!
அன்பு என்பது ஆத்ம சக்தி! ஆயுதங்களால் சாதிக்க முடியாததை, வன்முறையால் கைப்பற்ற முடியாததை, பணத்தாலோ, மற்றும் இதர செல்வாக்குகளாலோ செய்ய முடியாததை அன்பு கணத்தில் சாதித்து விடும். மனித மொழிகளின் பல கோடி வார்த்தைகளால் விபரிக்க முடியாத இன்பத்தை ஒரு அன்பான புன்னகை அரை நொடியில் வெளிப்படுத்திவிடும். இதை எழுதும் போதே என் கண்கள் இயல்பாகக் கலங்குகின்றன.. இதற்காகத்தானே இந்த உலகம் ஏங்கித் தவித்திருக்கிறது? இதற்காகத் தானே இந்த மனித குலம் கண்ணீர் வடித்திருக்கிறது?
பல இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றொழித்த ஹிட்லர் ஏங்கித் தவித்தது தன் தாயின் அன்புக்காத்தானே! தன்னைப் போலவே பல்லாயிரம் யூதக் குழந்தைகள் தாயின்றித் தவிப்பார்களே என்ற எண்ணத்தை அவனுள் யாராவது ஏற்றியிருந்தால் ஒருவேளை அவன் இந்தப் பேரழிவை நிகழ்த்தாமல் இருந்திருக்க மாட்டானா?.
பொறாமைப்படுவதாலும் அடுத்தவரை வெறுப்பதாலும் நாம் சாதித்ததுதான் என்ன?

நாம் ஏன் அடுத்தவரை வெறுக்க வேண்டும்? உங்களுக்கும் இன்னொருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏதாவது இருக்கிறதா? அருகில் உள்ள தேநீர்க் கடை போதுமே பிரச்சனையைத் தீர்ப்பதற்கு. அவருடன் தேநீரை அருந்திக் கொண்டு உங்கள் வேறுபாடுகளைக் களையலாமே! அன்பு மட்டும் அகத்தில் இருந்தால் போதும். பிரச்சனைகள் தானாகத் தீர்ந்துவிடும்.
அன்பு ‘நீ எனக்குத் தா’ என்று கேட்பதில்லை. மாறாக நான் உனக்குத் தருகின்றேன் என்று சொல்லும். அன்பு கைம்மாறாக எதையும் எதிர்பார்ப்பதில்லை. அது கோவிலுக்குச் சென்று வியாபாரம் பேசுவதில்லை. அன்பு எப்போதும் கொடுப்பதையே விரும்புகின்றது. தன்
ஊனை உருக்கியாவது அது நன்மை செய்யவே விரும்புகின்றது. அப்படிப்பட்ட வாழ்க்கை வரலாறுதான் அன்னை திரேசாவின் உடையது.
அவரின் வாழ்க்கையைச் சற்று எண்ணிப் பார்ப்போம். எதற்காக அவர் தன்னை இந்த உலக மக்களுக்காக அர்ப்பணிக்கவேண்டும்? எதற்காக ஏழைப்பட்ட, நோய்வாய்ப்பட்ட மக்களுக்காளிணித் தன் இளமையைத் தியாகம் செய்து இந்தியாவுக்கு வர வேண்டும்? எல்லாம் அன்புக்காகத்தான். அன்புக்கு காலம், தூரம், போன்ற கட்டுப்பாடுகள் கிடையாது.

அன்பில் பயம் என்பதே இருப்பதில்லை. அது பயமறியாது. இதற்கு ஒரு அழகான உதாரணம் ஒன்றை சுவாமி விவேகானந்தர் சொல்வார்.
ஒரு தாய் ஒரு வீதியில் சென்று கொண்டிருக்கிறாள். நாயொன்று அவளைப் பார்த்து குரைக்கின்றது. அவள் அஞ்சி விலகி ஒரு வீட்டினுள் ஒளிந்து கொள்கிறாள். மறு நாள் அவள் தன் குழந்தையோடு போகின்றாள் ஒரு சிங்கம் குழந்தை மீது பாய்கின்றது. அவள் என்ன செய்வாள்?
சிங்கத்தின் வாயில் தன்னைக் கொடுத்தாவது குழந்தையைக் காக்கத்தானே துணிவாள்! அதுதான் அன்பு!
நாங்கள் எவற்றையெல்லாம் வெளிப்படுத்துகிறோமோ அவற்றையே மீண்டும் பெறுகின்றோம். அன்பை வெளிப்படுத்தினால் அன்பைப்
பெறுவோம். நாங்கள் பிறரால் விரும்பப்பட வேண்டுமென்றே விரும்புகின்றோம். பிறர் எம்மில் அன்பு செலுத்துவதையே விரும்புகின்றோம். அவ்வாறிருக்கையில் நாம் ஏன் எம் போன்ற சக மனிதர்களின் மீது அன்பு செலுத்தச் சங்கடப்படுகின்றோம்? அன்பு சகல வேறுபாடுகளையும் நீக்கிவிடும் என்பதையும் நம்மையும் நம் சுற்றாடலையும் மாற்றிவிடும் என்பதையும் நாம் அறியமாட்டோமா?
“எல்லா அன்பும் வாழ்வு. அன்பே வாழ்வின் ஒரே நியதி. எல்லா சுயநலமும் மரணமே!- இந்த உலகமோ, அல்லது மறு உலகமோ
இது உண்மை. நன்மை செளிணிவது வாழ்வு, பிறருக்கு நன்மை செய்யாமல் இருப்பது சாவு. நமது பார்வைக்குத் தென்படுகின்ற மனித மிருகங்களுள் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் இறந்தவர்கள், வெறும் பிணங்கள். ஏனெனில் என் இளைஞர்களே!, அன்புடையவனைத் தவிர பிறர் வாழ்பவர்கள் அல்ல.”
“என் குழந்தைகளே, உணர்ச்சி கொள்ளுங்கள்!, உணர்ச்சி கொள்ளுங்கள்!. ஏழைகளுக்காக, பாமரர்களுக்காக, ஒதுக்கப் பட்டவர்களுக்காக உணர்ச்சி கொள்ளுங்கள். உணர்ச்சியில் ஆழ்ந்து செல்லுங்கள். இதயமே நின்று, மூளை குழம்பி, உங்களுக்குப்
பைத்தியமே பிடித்துவிடுமெனத் தோன்றும்வரையிலும் உணர்ச்சியில் மூழ்குங்கள். பிறகு இறைவனின் திருவடிகளில் உங்கள் அந்தராத்மாவைச் சமர்ப்பியுங்கள். அப்போது ஆற்றல் வரும், உதவி வரும், குறையாத ஊக்கம் வரும்.” என்று எம்மைத் தட்டி எழுப்புகின்றார் சுவாமி விவேகானந்தர்.
ஆம்! நாம் அன்பு என்ற அந்த மகத்தான சக்தியை எமக்குள்ளேயே தூங்க வைத்துக் கொண்டு வெளியில் உதவிகளை நாடி ஓடிக்கொண்டிருக்கிறோம். உள்ளங்கைக்குள் உலகம் வந்த பின்னும் அடுத்த வீட்டுக்காரனுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். விஞ்ஞானம் விண்வெளியில் வீடு கட்டும் போதும், இன்னும் நாம் வேலிகளோடு போராடிக் கொண்டிருக்கிறோம். அன்பின் பெறுமதியை உணராததாலேயே பிறரால் எமக்காகச் செய்யப்பட்ட மகத்தான தியாகங்களுக்கு மரியாதை அளிக்காதிருக்கிறோம்.
ஓ! இறைவா! இந்த இயந்திர உலகில் வெறுப்பே இல்லாத, அன்பை மட்டுமே கொடுக்கவும் பெறவும் முடியுமானதொரு உலகத்தை எம்மால்
கனவாவது காண முடியுமா?
-ஹரிசன்

