
சில விஷயங்களால், ஒரு சிலருக்குப் பெருமை. அபூர்வமாக ஒரு சிலரால், சில விஷயங்களுக்கே பெருமை! இரண்டாவது ரகத்துக்கு மிகப்பொருத்தமான உதாரணம் கலைஞானி கமல்! அவரது 50 வருட கால அனுபவத்தால், திரையுலகத்துக்கே பெருமை! 50 வயதிருக்குமா என்பதையே ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்களுக்கு, தான் சினிமாவில் அடியெடுத்து வைத்தே 50 ஆண்டு காலம் நிறைவேறி விட்டது என்கிற இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கிறார் கமல்.
அவ்வப்போது புதிய படம் கொடுக்கும் போதோ, அது தொடர்பான சர்ச்சை எழும்போதோ கமல் பெயர் மீடியாவில் அடிபடும். மற்றபடி, இந்த அரிய 50 ஆண்டுகால அனுபவத்தில் அவரைத் தேடிக் கொடுக்கப்பட்ட விருதுகளோ, அங்கீகாரமோ ரொம்பவும் குறைவு. 50 வருடப் பூர்த்தியைக் கொண்டாடும் வகையில் கமலுக்குக் குவிகிற பாராட்டுகளைக் கூட, தன்னடகத்துடனும், தயக்கத்துடனுமே ஏற்றுக் கொண்டிருக்கிறார் கமல். விருதுகள் கிடைக்காததில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்கிறார் வெளிப்படையாக. ‘‘இதுல வருத்தப்படறதுக்கு என்ன இருக்கு? எனக்குக் கிடைக்கலையேனு வருத்தப்படறதுக்குப் பதில், ரஹ்மானுக்கு கிடைச்சதை நினைச்சு சந்தோஷமும், பெருமையும் படறேன்’’ என்கிறார் கமல்.
நடிகர் திலகம் சிவாஜிதான் தனக்கு முதலும் முற்றிலுமான இன்ஸ்பிரேஷன் என எந்த மேடையிலும் முழங்கத் தயங்குவதில்லை கமல்.
அடுத்த சிவாஜி என்று தன்னைத் தொடர்கிற விமர்சனத்தையும் அவையடக்கத்துடன் மறுக்கிறார். அடுத்த கமல் யார் என்கிற கேள்விக்கும் இவரது பதில் வித்தியாசமாகவே இருக்கிறது.

‘‘சிவாஜி சாரை போய் இன்னொரு பி.யு. சின்னப்பானு சொன்னா எப்படியிருந்திருக்கும்? அது போலத்தான் இது. என் மகள் ஸ்ருதிகிட்ட போய் கமல் மாதிரி வரணும்னு சொல்லிப் பாருங்க… மீசை வச்சுக்க சொல்றீங்களானு கேட்பாங்க… இன்னொரு கமலை ஏன் தேடனும்? அடுத்து வரப் போறவங்க என்னை விஞ்சற மாதிரி இருக்கட்டுமே…’’ என்கிறார்.
கமல்-ஸ்ரீதேவி ஜோடி… இப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும். நிஜ காதலர்கள் மாதிரி அந்த ஜோடிக்கிடையில் அப்படியோர் கெமிஸ்ட்ரியை காட்சிகளில் உணரலாம். இந்த ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் 27. அதைப் பற்றி கமல் என்ன நினைக்கிறார்?
‘‘படம் பார்த்த ரசிகர்களுக்கு அப்படித் தோணியிருக்கலாம். ஆனா எங்களுக்குள்ள அப்படி எதுவும் இருந்ததில்லைங்கிறதுதான் உண்மை. நாங்க கல்யாணம் பண்ணிக்குவோம்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க. நாங்க ஒருத்தரை ஒருத்தர் ரசிக்க ஆரம்பிக்கிறப்ப, எங்க ரெண்டு பேர் பாதையும் வேற வேற வழில பயணமாக ஆரம்பிச்சது. அவங்க வாழ்க்கை, காதல், கல்யாணம்னு போயிட்டோம். எங்க நட்பு ரொம்ப அற்புதமானது. இப்பவும் ஸ்ரீதேவிக்கு என் மேல நிறைய மரியாதை உண்டு!’’
கமல் நடிப்பைவிட அதிகமாக நேசிப்பது இயக்கத்தை… ‘‘நடிகன் என்றவன், தன்னை மட்டுமே கவனிச்சுக்கிட்டா போதும். ஆனா இயக்குனர், நடிகனையும் சேர்த்துக் கவனிக்கμம். அந்தப் பலமுனை பரிமாணம் கையாள கஷ்டமானதும்கூட, ஆனாலும் சுவாரசியமானது’’ என்று அதற்கொரு விளக்கமும் தருகிறார்.
கமல்-ரஜினி காம்பினேஷனில் வெளிவந்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். இருவரும் துருவ சூப்பர் ஸ்டார்கள் ஆன பிறகு, சேர்ந்து நடிப்பதில்லை என்கிற பேச்சுவார்த்தையுடன், அந்த ஜோடிக்கு முற்றுப் புள்ளி வைத்தனர். ஆனால், இருவரும் சேர்ந்து பங்கு கொள்கிற எந்த நிகழ்ச்சியிலும், ‘எப்ப மறுபடி ஜோடி சேரப் போறீங்க?’ என்கிற கேள்வி அவர்களை விரட்டாமல் இருப்பதில்லை.
‘‘நாங்க ரெடிதான். ஆனா, எங்க ரெண்டு பேருக்கும் சம்பளம் கொடுக்கிற காசுல ஒரு படமே எடுத்துடலாம். அந்தளவுக்கு செலவழிக்க எந்த தயாரிப்பாளர் தயாரா இருப்பார்…’’ என்று சிரிப்புடன் கூடிய பதிலே வருகிறது கமலிடமிருந்து.
‘‘என்னுடைய அடிவானத்தில் எனக்குத் தெரிந்த ஒரே சூரியன் சிவாஜி. நான் வளர்ந்தது அவரைப் பார்த்துதான்!’’ என்று நடிகர் திலகத்தைப் பற்றிப் பேசுகிற கமல்,எம்.ஜி.ஆர் மீதும் அளவற்ற பற்று கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. ‘‘சின்ன வயசுல எம்.ஜி.ஆரோட நடிச்சிருக்கேன்.ஒரு தடவை அவரை சந்திச்சப்ப,‘உங்களை மாதிரி வரணும்னு ஆசை’னு சொன்னேன்.‘என்னை மாதிரி ஏன் ஆகணும்? நான் பத்து படி ஏறியிருக்கேன்னா,நீ பதினோறாவது படிலேர்ந்துதானே ஆரம்பிக்கணும்’னார்.இப்ப என்னை மாதிரி வரணும்னு நினைக்கிறவங்களுக்கு நான் அதைத்தான் சொல்றேன்’’என்று மலரும் நினைவுகளுக்குப் போகிறார்.
சண்டைக்காட்சி, டூயட் என மசாலா படத்தில், சாதாரண ஹீரோவாக நடித்தாலும், ஒரு சின்ன உறுத்தலோ, முகச் சுளிப்போ இல்லாமல் ரசிக்க முடிகிற ஒருவர் கமல். காரணம் என்றும் மாறாத அவரது இளமைத் தோற்றம். என்னதான் ரகசியம்?
‘‘அது அம்மா, அப்பா கொடுத்த வரம். அவ்வளவுதான். நானும் சின்ன வயசுல சிகரெட் பிடிக்கிறது மாதிரியான சராசரி இளைஞனுக்கான எல்லா கெட்டப் பழக்கங்களோடவும் இருந்திருக்கேன். ஆனா, ரொம்ப சீக்கிரமே அதுலேர்ந்து என்னைவிடுவிச்சுக்கிட்டேன். மத்தபடி என்னைச் சுத்தியிருக்கிற நல்ல நண்பர்கள்… மனிதர்கள்… இதெல்லாம்தான் காரணம்…’’
‘மருத நாயகம்’ படத்தை மறுபடி தொடங்குவதற்கான முயற்சிகளில் இருக்கிற கமல், ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்துக்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்போது கமலுக்குத் திரையுலக பொன்விழா ஆண்டு. ‘லக்’ இந்திப்படம் வாயிலாக நடிப்பிலும், உன்னைப் போல் ஒருவன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கிற மகள் ஸ்ருதிக்கு இது முதல் ஆண்டு.
என்ன ஒரு பொருத்தம்!
-விஜயா

