மயன் மகள் – சரித்திரத் தொடர்

சென்றது….

நாகநாட்டரசன் விசுவகர்மா. அவனின் மகன் மயன். ஓர் இரவு மயனின் மனைவி இளமதி வசந்த மாளிகையில் இருந்து நிலவொளியில் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே எதையோ பார்த்து ‘கண்டு கொண்டேன்’ என ஆனந்தக் கூத்தாடினாள். அதனைக் காட்ட நிலா முற்றத்திற்கு மயனை அழைத்துச் சென்றாள். அவளது முன்நெற்றியில் அணிந்திருந்த சூடிகையில் இருந்த மனோமய மாமணியின் ஒளி அவனை கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்றது. அவளை அவன் காதலித்ததும், இரு நண்பர்களுடன் உலக நாடுகளை சுற்றிப் பார்த்து வரும் வழியில் குமரிமலைத் தொடரின் நீலமலைச் சிகரத்திற்கு சென்றதையும் நினைத்தான். இளமதிக்காக மாசுணத்திடமிருந்து மனோமயமாமணியை எடுக்கச் சென்ற மயன் ஒரு மாசுணத்தை கொன்றான். அதனால் அவனும் நண்பர்களும் மாசுணங்களிடையே அகப்பட்டுக் கொண்டனர்.

இனி…

“பாம்புமணி உமிழ பல்வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம்குழல் தெள்விளி பயிற்ற”
- கபிலர்

இதயமே ஒரு கணம் நின்று மீண்டும் மெல்ல இயங்கத் தொடங்கியது போல் உணர்ந்தார்கள். அவர்கள் அதற்கு முன் அது போன்ற பேருருவத்தைக் கண்டதேயில்லை. அதுவும் உடலெங்கும் பெரும் பெரும் வெள்ளைச் சுணங்களுடன்1 பச்சைநிற மாமிச பிண்டத்தைக் கண்டதும்,“இது என்ன கனவா” என முகிலன் ஒருமுறை தன்னையே தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

நத்தத்தனோ, தலை துண்டாடப்பட்ட அந்தப் பேருருவம் உயர்ந்தோங்கிய மரத்தின் கிளையிலிருந்து தொங்கியபடி துடிதுடித்து ஊசலாடுவதைப் பார்த்து, அடுத்து என்ன செய்வது என யோசித்தான். அதிலிருந்து கொட்டிச் சிதறிய இரத்தம் மரம், செடி, கொடி யாவற்றிலும் பட்டு அவ்விடத்தை இரத்தக் காடாக்கியது. அதன் உடல், ஊசலாடித் துடிதுடித்த வேகத்தாலும், உடலின் பாரத்தாலும் மரக்கிளையில் இருந்து நழுவி, கீழே சிந்தியிருந்த இரத்த வெள்ளத்தில் மொல மொலவென விழுந்தது. அது விழுந்த சத்தத்தில் மரங்களில் இருந்த பறவைகள் கூக்குரல் இட்டு சிறகடித்துப் பறந்தன. பச்சைக் குன்று ஒன்று அங்கே திடீரென தோன்றியது போல் அதனுடல் குவிந்து கிடந்தது. அதிலிருந்து எழுந்த ஒருவித இரத்த வாடை அவர்களை மூச்சுத் திணற வைத்தது.

அது நச்சுவாயு என்பதை உணர்ந்த முகிலன், “நத்தத்தா! புகைக்குண்டு2 எங்கே? அதனை உடனே எடு” என்றான்.

முகிலன் சொல்வதற்கு முன்பே, “அந்த நச்சு வாயுவை அவர்கள் சுவாசிக்காது இருப்பதற்காக நத்தத்தன் புகைக்குண்டை எடுத்து மெல்லத் திருகினான். புகைக் குண்டின் முனையில் இருந்த துவாரங்களின் ஊடாக பேரண்டப் புகை3 அங்கே பரவியது. அப்பேரண்டப் புகை மாசுணத்தின் நச்சு வாயுவை உள்வாங்கிக் கொண்டது. எனினும் மூவரும் சிறிது உடல் தளர்ந்திருந்தனர். தன்னை நிதானப்படுத்திக் கொண்ட நத்தத்தன், “மாயா! இது என்ன என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

“மாசுணம்” என்று மயன் ஒரு சொல்லில் பதிலளித்தான். மாசுணம் & பெயர் காதில் விழுந்ததும், “ஆ மாசுணமா?” என்ற முகிலன், “அப்படியானால் நாம் விரைவில் இங்கிருந்து போக வேண்டும். இருந்தால் ஆபத்தை விலை கொடுத்து வாங்கியவர் ஆவோம்.”

“மாயா! உனக்கு வந்த கோபத்தின் காரணமும் புரிந்தது. நான் அடித்த ஆம்பல் பண்ணின் சீழ்க்கையால் வந்த கேடுதான் இது” என்றான்.

“முடிந்ததைக் கதைத்து பயனில்லை. செய்ய வேண்டியதைப் பார்ப்போம்.” எனக் கூறியபடி நத்தத்தன் நடக்கத் தொடங்கினான்.

நத்தத்தனுடன் நடந்து கொண்டே, “நாம் விட்ட பிழை என்ன என்பதை சிந்திப்பதாலும், பேசுவதாலும் அப்பிழையில் இருந்து திருந்துவதற்கான வழியை நாம் அறிய முடியும்” எனக் கூறிய மயன், “முகிலா! உன் சீழ்க்கை மட்டுமல்ல, இடி முழக்கத்தைக் கேட்டாலும் மாசுணங்கன் கொட்டம்4 அடிக்குமாம். இடியை யானையின் பிளிறல்5 என நினைத்து இடிமுழக்கம் கேட்ட திசையில் யானையைத் தேடி மாசுணங்கள் மலை பெயர்ந்து போவது போலப் போகுமாம். மாசுணங்கள் தனியே வாழ்வதில்லை. அவை கூட்டமாக வாழ்பவை. நான் ஒன்றைக் கொன்று விட்டேன். இனி எதுவும் இங்கு நடைபெறலாம். நாம் மிக விழிப்பாக இருக்க வேண்டும்” என்றான்.

நத்தத்தன் மிக விரைவாக தன்னிடம் இருந்த பச்சைநிற ஆம்பல் குழலை6 எடுத்து மயனிடம் கொடுத்தபடி தன்னிடம் என்ன என்ன இருக்கின்றன என்பதை பார்த்துக் கொண்டான்.

முகிலன், மயனைப் பார்த்து, “மாயா! மாசுணங்கள் கூட்டமாக வாழும் என்றாயே, அதன் கூட்டத்தில் எத்தனை மாசுணங்கள் இருக்கும்” என்றான். “முகிலா! எத்தனை என்பதை அறியவேண்டுமா? உன்னைச் சுற்றி இருப்பவற்றை நீயே எண்ணிப் பார்த்துக் கொள்” என்று கூறிய நத்தத்தன் மயனைப் பார்த்தான். மயன் எவர் சொல்வதையும் கேட்க முடியாத ஓர் அதிர்ச்சியில் அவர்களைச் சூழ்ந்திருக்கும் மாசுணங்களைக் கண்டு அசைவற்று நின்றான். குமரிமலைத் தொடரின் நீலமலைச் சிகரத்திலா இவ்வளவு தொகையான மாசுணங்கள்! மேலே மரக்கிளையில் இருந்து சில ஒவ்வொரு விதமாக ஊசலாடிக் கொண்டிருக்க, சில மரங்களில் நழுவிவர, கண்களைச் சுழற்றி விநோதமாக சில பார்த்தன. சில மாசுணங்கள் இவர்களை வேடிக்கை பார்க்க ஒன்றை ஒன்று முந்தி அடித்துக் கொண்டு முன்னால் வந்தன. அப்போது அவை உண்டாக்கிய விநோத ஒலிகள் இர்………. இஸ்………. ஸ்; ப்பூ………. இஸ்………. சர்………. இஸ்………. ஸ்; மூர்………. இஸ்……….ஸ் என ஓர் இசைக் கோவையாக ஒலித்தது.

அந்த இசைக் கோவையை செவிமடுத்த மயன், நண்பர்களைப் பார்த்து, “ஆயுதங்களை உபயோகித்து நாம் இவற்றிடம் இருந்து தப்பிவிட முடியாது. நடந்தாலோ ஓடினாலோ நம் உயிர் நம்மிடம் இருக்காது. இந்த மாசுணங்கள் போல நாம் அசைந்தசைந்து மயூராசனத்தில்7 அந்தக் குன்றுக்கு ஊர்ந்து செல்ல வேண்டும்” என மெதுவாகக் கூறி ஜாடை காட்டினான்.

“அங்கு சென்றதும், முகிலா! நீ உன் வேலையைத் தொடங்கு, நத்தத்தன் இன்கிணையை8 அடிக்க நான் என் பங்கைச் செய்கின்றேன்” என்றான்.
மயன், “முகிலா! நீ உன் வேலையைத் தொடங்கு” என்றதைக் கேட்ட முகிலன் தான் எதைச் செய்வது எனச் சிந்தித்தான்.

‘நத்தத்தன் இன்கிணையை அடிக்க’ என்றதும், தனக்கு இடப்பட்ட வேலை எது என்பது முகிலனுக்குப் புரிந்தது. மூவரும் தத்தம் பொருட்களை முதுகில் சுமந்தபடி மயூராசனத்தில் குன்றை நோக்கி ஊர்ந்தனர். அவர்கள் அசையத் தொடங்கியதும் மாசுணங்களும் அசைந்தன. அவர்கள் நின்றால் அவையும் நின்றன.

அங்கே காணப்பட்ட மயான அமைதி ‘தங்கள் மரண ஊர்வலத்தை மாசுணங்கள் நடத்துவது போல் நத்தத்தனுக்குத் தெரிந்தது. முகிலன் தான் செய்யப் போவதை மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டான். ‘இவ்வளவு சொற்ப நேரத்தில் எப்படி இத்தகைய பெரிய மாசுணப்படையே தங்களைச் சூழ்ந்தது’ என மயன் எண்ணினான். ‘முகிலனின் சீழ்க்கை மட்டும் இதற்கு காரணமாக இருக்காது. தன்னால் கொல்லப்பட்ட மாசுணத்தின் இரத்த வாடையும், அதனுடல் நிலத்தில் விழுந்த சத்தத்தின் அதிர்வும், மரங்களில் இருந்த பறவைகள், மிருகங்கள் எழுப்பிய ஒலிகளுமே மாசுணங்களை அவர்களை நோக்கி படையெடுக்க வைத்திருக்க வேண்டும்’ என எண்ணம் சுழன்றது. அப்போது, சர்ரென இரண்டு மாசுணங்கள் மரத்தின் கிளையில் தொங்கியபடி மேலிருந்து அவர்களிடம் வந்தன. ஒன்று பல்லைக் காட்டி இளித்தது. மற்றது அவர்களை விழுங்க வாயையும் திறந்தது. திறந்த வேகத்தில் அவர்களைப் பார்த்து ஒருவித பயங்கர ஒலி எழுப்பியது. இரண்டும் சேர்ந்து அதே ஒலியை எழுப்பியபடி மீண்டும் கிளைக்குச் சென்று பயத்துடன் தம்மை கிளையில் முடக்கிக் கொண்டன. அவற்றின் ஒலியைக் கேட்டு மாசுணப் படையும் மீண்டும் மீண்டும் ஒலி எழுப்பிக் கொண்டேயிருந்தன. மாசுணங்கள் எதற்காகவோ தங்களுக்குக் கிட்டவரப் பயப்படுகின்றன என்பதை மூவரும் புரிந்து கொண்டனர். ஆனால் அவை ஏன் அப்படிச் செய்கின்றன என்பது புரியவில்லை. அவற்றின் அமளி துமளிக்கிடையில் அவர்கள் மிக விரைவாகக் குன்றை அடைந்து ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடிய விதத்தில் அமர்ந்தனர். முகிலன், ‘வயிரகாந்தம்9 என்னும் பண்ணை சீழ்க்கையில் அடிக்கத் தொடங்கினான். அப்போது மாலை வேளை ஆதலால் அப்பண்ணை அவன் அடித்தான். அந்தப் பண்ணின் நாதம் உடலில் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியது. அவ்வதிர்வுகள் உடலிலுள்ள நரம்புகளை மீட்டும் தன்மை உடையவை. எனவே வயிரத்தின் ஒளிக்கதிர் பிரகாசிப்பது போல இப்பண்ணின் ஒலியலை மாசுணங்களின் செயற்பாட்டை கட்டுப்படுத்தியது. நத்தத்தன் தனது இன்கிணையை வாத்தியத்தை எடுத்து வாசித்தான்.

வயிரகாந்தப்பண் குழல், யாழ், வீணை முதலியவற்றில் வாசிக்க நன்கு இடம் கொடுக்கும். ஆதலால் மயனும் தனது ஆம்பலம் தீம்குழலை எடுத்து முகிலனின் சீள்க்கையுடன் சேர்ந்து வயிரகாந்தப்பண்ணிற்கு இசை கூட்டினான்.

மயனின் ஆம்பற்குழலின் இசைக்கு ஏற்ப தனது இன்கிணையின் நடையை மாற்றியடித்த நத்தத்தன் ‘மனிதர்களாகிய நாம் போயும் போயும் இந்த மாசுணங்களுக்கா இசைத்திருவிழா செய்கின்றோம்’ என நினைத்தான்.

‘அதுவும் நாக நாட்டு இளவரசனின் இசையைக் கேட்க இந்த மாசுணங்கள் எல்லாம் கொடுத்து வைத்திருக்கின்றன’ என எண்ணிச் சிரித்தான்.
கவிஞனான அவன் உள்ளம் மாசுணங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து இரசித்தது. நகரங்களில் கூட இசை கேட்க வரும் அவையோர் சிலர் வெட்டிப் பேச்சுப் பேசி, இசை கேட்பவர்களையும் கேட்க விடாமல் செய்வதைப் பார்த்திருக்கின்றான். பலரின் பார்வை அரங்கில் இருக்க, எண்ணமோ அந்த இசையரங்கிற்கு சம்பந்தம் இல்லாது எங்கோ சென்றிருக்கும். அப்படிப்பட்ட எத்தனையோ விசித்திர மனிதரை அவனின் கண்கள் எடை போட்டிருக்கின்றன.

ஆனால் இங்கே காட்டிலோ ‘மாசுணங்கள் எவ்வளவு ஒழுங்காக ஒன்றன் பின் ஒன்று அமர்ந்தும், அந்தரத்தே தொங்கியும் இசை கேட்கின்றன. சில தலையை மட்டும் அல்லாது தனது தாளகதிக்கு ஏற்ப வாலையும் ஆட்டுகின்றனவே’ ‘நாட்டு மனிதர்களை விட இந்தக் காட்டு மாசுணங்கள் எவ்வளவோ மேல்’ கைதேர்ந்த கலா விற்பனர்கள் போல் இருந்து அவை தலையை ஆட்டுவது அவன் மனதைக் கவர்ந்தது. அதிலும் தமது உடலையே வட்டமாக சுற்றி ஆசனமாக்கி, மேலே தலையை வைத்து சிம்மாசனத்தில் இருப்பது போல் அவற்றில் சில அமர்ந்திருந்தன. அப்படி மாசுணங்கள் இருந்து இசை கேட்கும் பாங்கு நத்தத்தனுக்கு பிடித்திருந்தது.

‘இசையை இரசித்துக் கேட்பது எப்படி என்பதை இந்த மாசுணங்களிடம் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்’ என நினைத்தபடி முன்வரிசையில் வந்திருந்து இசை கேட்கும் குட்டி மாசுணத்தின் வாலாட்டலையும், தலையை இடைஇடையே நிலத்தில் அடிப்பதையும் பார்த்து இரசித்தான். இசை நிகழ்ச்சியின் நடுநடுவே ‘அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற விபரத்தை குழலிசையிலேயே மயன் நண்பர்களுக்குச் சொன்னான். முகிலனும் சீழ்க்கையால் பதில் கூறினான்.

மயனும் முகிலனும் சேர்ந்தும், ஒருவர் மாறி ஒருவர் தனித்தும் வயிரகாந்தப் பண்ணை இசைத்தனர். நேரம் மெல்ல மெல்ல உருண்டோடிக் கொண்டிருந்தது. எங்கும் இருள் கவிந்தது.10

அரங்கச் சுற்றுச் சூழல் மாறியது. ஆனால் இசை கேட்கும் அவையோரோ இடத்தைவிட்டு நகரவே இல்லை. கலைஞர்களும் நகர முடியாது. அசைந்தாலோ அவர்கள் உடல் துண்டாடப்படும். இந்த நிலை எந்தக் கலைஞனுக்கும் வரக்கூடாது. அவர்கள் மூவரது நிலையும் பேய் வாலை பிடித்தவன் கதையாகப் போய் விட்டது.
மயன், ‘ஆம்பல் பண்ணை11 சீழ்க்கையில் அடிக்குமாறு வயிரகாந்தப் பண்ணில் முகிலனுக்கு கட்டளை இட்டான். ஆம்பல் பண்ணை நள்ளிரவுக்கு மேல்வரை, நாம் இசைக்க வேண்டி இருக்கும் என குழல் இசையிலேயே கூறினான்.

முகிலனுக்கு வயிரகாந்தப் பண்ணிலிருந்து ஆம்பல் பண்ணுக்கு மாற்றி சீழ்க்கை அடிப்பது மிகச் சுலபமாக இருந்தது. இரண்டு பண்ணும் ஒரு ‘தாய்ப் பாலையில்12 இருந்து பிறந்தவையே. அப்படி இருந்தும் ஒரு பண்ணில் இருந்து மற்றப் பண்ணிற்கு சீழ்க்கையை மாற்றிய போது அப்பண்களின் தனி இயல்புகள் சிறிதும் குலையாது அவற்றை இசைத்தான்.

அவர்களின் இசைக்குத் தக்கபடி தனது நடையை மாற்றி மாற்றி இன்கிணையில் வாசித்து வந்த நத்தத்தன் ஆம்பல் பண்ணிற்கு சரபந்தன13 தாளத்தில் வாசிக்கத் தொடங்கினான்.

பயங்கரமான ஆட்கொள்ளி மாசுணங்களிடையே அகப்பட்டு இருந்த போதும் தன் நண்பனின் திறமையை மயன் பாராட்டினான். இது அவனின் ஆளுமையையும் ஓர்மத்தையும்14 எடுத்துக்காட்டியது.

ஆம்பல் பண்ணையும், சரபந்தன தாளத்தையும் கேட்ட மாசுணங்கள் அவர்களை நெருங்கி வந்தன. அதைக் கண்டு தடுமாறாமல் மூவரும் இசையோடு ஒன்றினர்.
அதே வேளையில் அந்த மாசுணங்களிடையே பெரிய சலசலப்பு ஏற்பட்டது. அங்கே நான்கு மாசுணங்கள் புடைசூழ விசித்திரமான ஒரு மாசுணம் நிமிர்ந்து அசைந்தசைந்து வந்தது.

அம்மாசுணம் மிக அழகாகவும், தலையில் பூவல் கொண்டையுடனும் மற்றவற்றில் இருந்து வேறுபட்டும் இருந்தது. அதன் வால் மிகக் குறுகியும் ஐந்தாகப் பிரிந்தும் இருந்தது. அந்த ஐந்து வால்களை நிலத்தில் மாறி மாறி ஊன்றி அசைந்தசைந்து வந்தது. ஆதலால் அது நடை பழகுவது போல் தெரிந்தது. அது எல்லா மாசுணங்களுக்கும் முன்னே வந்து நின்றது. அவர்களைப் பார்த்து தன் தலையை ஆட்டியது. அதன் பார்வையில் அன்பு இழையோடுவது போல் மயன் உணர்ந்தான். அதைக் கண்டதும் மயனின் உள்ளத்தில் பேருவகை ஏற்பட்டது. மனோமய மாமணிக்காக15 எந்த மாசுணத்தை தேடி கிழக்கு மலைச் சாரல் முழுவதும் அலைய வேண்டும் என நினைத்தானோ அந்த அரசமாசுணமே இப்போது அவனைத் தேடி அவன் முன்னே வந்து நிற்கின்றது.

மா எந்தை16 கோயில் இறைவனின் கருணையை எண்ணி ஒரு கணம் வணங்கினான். அந்த அரசமாசுணம் தட்டம்17 தெரிய மயனைப் பார்த்து இளித்தது. அதன் கொடிய இளிப்புக்கூட மயனுக்கு சிரிப்பது போலிருந்தது. அகில உலகமே தன் காலடியில் வந்து அடிபணிவதாக அவன் உணர்ந்தான். அரசமாசுணத்தை தன் காலடியில் கொணர்ந்து சேர்த்த அந்த மானசசக்தியை மீண்டும் தொழுதான். இளமதியை நினைத்து ‘அவள் மிக அதிஷ்டசாலி’ என மனதினில் பாராட்டிக் கொண்டான். “எங்கள் இசை நிகழ்ச்சியைப் பார்க்க முக்கிய விருந்தினர் வந்துவிட்டார்” என முகிலன் சீழ்க்கையில் சொன்னான். நண்பர்கள் அதனை ஆமோதித்துக் கொண்டனர். நேரம் போவது தெரியாது மூவரும் மிக உற்சாகமாக ஆம்பல் பண்ணை இசைத்தனர். நேரம் நள்ளிரவை நெருங்கியும் வாசிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. நேரம் செல்லச் செல்ல களைப்பு மிகுதியால் முகிலன் தான் இருந்த நிலையில் இருந்து சற்று மாறி இருந்தான்.

அப்படியே முகிலனை, அரசமாசுணம் கவ்வி எடுத்தது. மற்றைய மாசுணங்கள் ஒலி எழுப்பி ஆரவாரம் செய்தன. முகிலனை அரசமாசுணம் கவ்வியெடுத்த வேகத்திலேயே விழுங்காமல் காறி உமிழ்ந்தது. அது உமிழ்ந்த வேகத்தில் ஒரு கல்லில் மோதி முகிலன் விழுந்தான். அவன் தலையில் இருந்து இரத்தம் கொட்டியது. விழுந்து கிடக்கும் முகிலனை கடித்துக் குதறுவதற்காக அரசமாசுணத்துடன் வந்த மாசுணமொன்று விரைந்து சென்றது. மற்ற மூன்று மாசுணங்களும் முகிலனை நோக்கிப் பாய்ந்தன. மயன் அதற்கும் கலங்காது ஆம்பற் குழலை இசைத்தான். நள்ளிரவில் வாசிக்கும் ஆம்பல் பண்ணின் சுத்த இன்ப இசையால் தன்வசப்படுத்த முடியும் என்பதை மயன் தன் குருவின் மூலம் அறிந்துவைத்திருந்தான் எனவே “நத்தத்தனை ஆடாது அசையாது இருந்த இடத்திலே இருக்கும்படி” இசையில் கூறினான். அரசமாசுணம் மயன் அருகே வந்து மீண்டும் மீண்டும் அவனை முகர்ந்து முகர்ந்து பார்த்தது. அவன் மடியில் தலை வைத்திருந்தது. அதன் தலையே மயனுக்கு பெரும் சுமையாக இருந்தது. மயன் ஆம்பல் பண்ணை துரிதகதியில்18 இசைக்கத் தொடங்கினான்.

அரசமாசுணம் எழுந்து துள்ளிப் பின்னால் சென்று, மயனின் ஆம்பல் பண்ணின் குழலிசைக்குத் தக்கபடி துரிதகதியில் ஆடியது. மிகவும் அற்புதமான ஒலி எழுப்பியபடி மயனின் அருகே மனோமயமாமணியை உமிழ்ந்தது. அதன் ஒளி அவ்விடம் எங்கும் செம்மஞ்சள் நிறத்தைப் பரப்பியது. மயனின் காலடியில் மனோமயமாமணி விழுந்த நேரம் புலஸ்த்தியபுரத்தில் சிவாம்சத்துடன்19 கூடிய ஞானக் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தையின் முகத்தில் மனோமயமாமணியை விஞ்சிய20 ஞானஒளி பிரகாசித்தது.

- ஒளிரும்

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions