Women's Beauty

மனிதமனம் விசித்தரமானது. அது இயற்கையின் எந்த அழகையும் இரசிக்கின்றது. அழகு என்னும் மாய மந்திரம் உலகில் உள்ள பெண்களை ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கின்றது. அதற்குக் காரணம் ஆண்கள். ஆண்கள் பெண்களின் அழகை இரசிப்பதால் அந்தக் கவர்ச்சிக்கு ஆட்பட்டு பெண்கள் அழகு நிலையங்களுக்கு செல்கிறார்கள். அங்கு தமது நேரத்தையும் பணத்தையும் விரையம் செய்கிறார்கள்.

உண்மையில் ஆண் பெண் என்ற பேதம் அற்று அழகைப்பேண எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். முகப்பருக்களைப் போக்குவது எப்படி? நரையை மறைப்பது எப்படி? தலைமுடியை பாதுகாப்பது முதல் முகம், கை, கால் இவற்றில் வளரும் தேவையற்ற ரோமங்களை நீக்குவது நகங்களைப் பராமரிப்பது என ஒவ்வொருவருக்கும் ஒவொரு பிரச்சினை இருந்துகொண்டே இருக்கின்றது.

அதற்காக கிழமைக்கு நான்கைந்து என்று அழகு சாதனப்பொருட்களை வாங்கி வீட்டில் அடுக்குகின்றோம். இரண்டு கிழமை பாவித்துவிட்டு அவை சரியில்லை என குப்பைக் கூடைக்குள் போடுகின்றோம், அல்லது “என் சிநேகிதி சொன்னாள் இது சரியிலையாம் அது நல்லதாம்” என்றும் சிலபொருட்கள் குப்பைக் கூடைகளை அடைகின்றன. இந்தச் செயலை நம் பெண்கள் செய்யாமல் இருப்பது நல்லது.

மேற்குலகில் வாழும் நாம் அந்தந்தக் கால நிலைக்கு ஏற்றவாறு உடைகளை உடுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். குளிர்கால உடைகளைப் பராமரிப்பதில் நாம் முக்கிய கவனம் எடுக்க வேண்டும். அவை விலை கூடுதாலக இருப்பதோடு, மிகவிரையில் பூஞ்சை மணம் வீசுகின்றன. எனவே அவற்றை காற்றோட்டமுள்ள இடத்தில் வைக்க வேண்டும். வீட்டில் இட வசதி இல்லாதவர்கள் அவற்றை பாவிக்காத நேரத்திலும் அடிக்கடி வெளியே எடுத்து காயவிடுவதால் அந்த பூஞ்சை மணம் ஏற்படாது தடுக்க முடியும். தயவு செய்து பூஞ்சை மணம் உள்ள ஆடைகளின் மேல் வாசனைத் திரவியங்களை அள்ளித் தெளிக்காதீர்கள். அது பூஞ்சை மணத்தைக் கூட்டும்.

Women's Beauty

இந்த உலகில் பிறப்பவர்கள் எவருமே நான் இப்படி அழகாக இருக்க வேண்டும் எனக் கேட்டுப் பிறந்ததில்லை. அப்படிக் கேட்டுப் பிறந்திருப்போமேயானால் நாம் அழகை இரசிக்கமாட்டோம். யார் அழகை யார் இரசிப்பது? அழகு நிலையங்களும் உருவாகி இராது.
புற அழகு என்பது மிக முக்கயமானது தான். அதனாலேயே ‘இரக்கப் போனாலும் சிறக்கப் போ” என்ற பழமொழி உருவாகியுள்ளது. பிச்சை எடுப்பதானாலும் அழகாக இருக்க வேண்டும் என்ற அழகுணர்க்சி நம் முன்னோரிடம் இருந்திருக்கின்றது.

பிச்சை எடுப்பவரிடம் என்ன அழகு சாதனப் பொருட்கள் கொட்டியா கிடக்கப்போகின்றது? எனவே அவர்கள் எதிர்பாத்த சிறப்பு என்ன? கந்தை ஆனாலும் கசக்கிக்கட்டி, குளித்து சுத்தமாக இருப்பதையே அவர்கள் எதிர்பார்த்தார்கள். இது போன்ற பல விடயங்களை அழகுணர்ச்சிக்காக நம்மவர்கள் சொல்லிச் சென்றிக்கின்றார்கள்.மிகவும் நேர்த்தியாக அழகுடன் உடையுடுத்தி நளினமாக இருப்பவர்களைக் கண்டால் அவர்களை மீண்டும் ஒருமுறை பார்க்க நம் கண்கள் தாவும். அப்படி உடுப்பவரைப்பற்றி ஒரு நல்லெண்ணம் தோன்றும். அவர்கள் கலை உணர்க்சி உள்ளவர்கள் என்றோ, எதையும் நிதானமாகச் செய்பவர் என்றோ நாமே முடிவு செய்து கொள்கின்றோம்.

இதே போல் ஏனோதானோ என்று ஒரு பக்கம் தொங்க வரிந்து கட்டிக்கொண்டு சீலை உடுப்பரைக் கண்டால் பொறுப்பற்றவர் என்று எண்ணத் தோன்றும். இந்த எண்ணம் உண்மையாகவும் இருக்காலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் சபைகளிலோ அல்லது நிகழ்வுகளிலோ பங்கேற்கும் முன் உங்களை நீங்களே ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.