நான் நீ மற்றும் காதல் …2

ஜில் என்று ஒரு தொடர்…

இதுவரை…

பதிப்பகத்தில் பணிபுரிகிற அழகிய அன்புப்பெண் ஓவியா. வீட்டில் பாட்டியும் அவளும்தான். சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட மகனின் மீதான கோபத்தை மருமகளிடம் காட்டியே வெறுப்பை விதைத்து, இருவரையும் மனவிலக்குப் பெற வைத்தவள் பாட்டி. இது தெரிந்தே சகிப்புத்தன்மையுடன் பாட்டியுடன் வாழ்கிறாள் ஓவியா.

அவளின் தோழி லதா. மிக அழகிய லதாவுக்கு திரைப்பட நாயகி ஆகிற கனவு. ஓவியாவுக்கோ அழகுக்குக் காத்திருக்கிற ஆபத்துகள் பற்றி கவலை.

இனி…

வீடு வந்து சேர்கிற வரைக்கும் சரி, சேர்ந்த பிறகும் சரி, லதாவின் நினைவு மட்டுமே முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.
ஆறாவதிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரையில் உற்ற தோழர்களாகப் படித்து மகிழ்ந்த காலம். ‘பிரமாதமான அழகி என் தோழி’ என்ற உணர்வுதான் முதலில் தோன்றும் என்பது இப்போதும் நினைவுக்கு வந்தது.

இந்தியப் பெண்கள் உலக அழகிகளாகத் தோற்றமளித்து வெற்றிக்கொடி நாட்டிய காலகட்டம்.
உள்ளூர் அழகிகள் ஒவ்வொருத்திக்கும் உலக அழகி கனவு தவிர வேறு எண்ணமில்லை. சிகப்பழகு க்ரீம்கள், டயட்கள், மென்மை உணவுகள், பட்டினி என்று லதா பரபரப்பதைப் பார்த்து இவள் சிரிப்பாள்.

“முகம் மட்டும் சிகப்பானால் போதுமா? பத்து நாட்களில் முகம் மட்டும் சிகப்பாகி விடுமா? அப்படியே ஆனாலும், அதுதான் அம்சமாக இருக்குமா? தவிர, நம் நாடு இருப்பது வெப்ப மண்டலத்தில். கறுப்புதான் தேசிய நிறம் இங்கு. அப்படி கறுப்பு என்கிற கவசம் இல்லாவிட்டால் அல்ட்ரா வயலட் கதிர்கள் நேரிடையாகப் பாய்ந்து நம்மை நோயாளிகளாக்கி விடும் லதா. இயற்கை அழகு போதும். அதுவும் உனக்கு இயற்கை சிறப்பான பரிசைக் கொடுத்திருக்கிறது லதா. ஏன் அலைபாய்கிறாய்?” என்று தோழியின் கையைப் பற்றிக்கொண்டு எத்தனையோ நாட்கள் அவள் கவலைப்பட்டிருக்கிறாள்.
சினிமா!

அதன் சக்தி அற்புதமானது.

அதன் தாக்கம் ஆழமானது.

பொழுதுபோக்கு என்று மேலோட்டமான விஷயமாக அதை ஏற்றுக்கொள்ள முடியாது. பார்க்கிற விழிகளின் வழியே உட்புகுந்து, எண்ணத்தில் கரைந்து, இதயத்தைத் தொட்டு அவனிடத்திலே ரசவாதத்தைப் புரிந்து விடுகிற வல்லமை படைத்தது சினிமா… சந்தேகமே இல்லை. ஆனால், பெண்களுக்கு அது எந்த முகத்தைக் காட்டியிருக்கிறது? பெண்ணுக்கு என்ன மரியாதையைக் கொடுத்திருக்கிறது? பெண்ணை எப்படி தன் கேமரா கண்களால் பார்த்து வந்திருக்கிறது? விரக்தியும் வெறுமையும் பெருமூச்சும் அவமான உணர்வும்தானே எஞ்சுகின்றன?

“அய்யோ லதா, தெரிந்தேவா போய் சிங்கத்தின் குகையில் சிக்கிக்கொள்ளப் போகிறாய்” என்று தொண்டையில் சீறிக்கொண்டு பாய்ந்த கேள்வியை நசுக்கி விட்டு அவள் காபியைக் கலந்தாள். இல்லை. எதுவுமே எப்போதுமே ஒரே மாதிரி இருப்பதில்லை. மாற்றங்கள் என்பவை நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். நேற்றைய இலைகளை இன்றைய இலைகள் வந்து பின்னே தள்ளிக்கொண்டேதான் இருக்கின்றன.

‘‘எனக்கும் அரை டம்ளர் காபி கலந்து கொடேன் ஓவியா…’’ என்று பாட்டி டி.வி பார்த்தபடி குரல் கொடுத்தாள்.

‘‘என்னிக்கு எனக்கு மட்டும் கலந்துக்கிட்டிருக்கேன் பாட்டி? உனக்கும் சேர்த்துத்தான் கலந்திருக்கேன். இந்தா…’’ என்று நீட்டினாள்.

‘‘என் பேத்தின்னா பேத்திதான்…’’ என்று பாட்டி பூரித்தபோது, அவள் எந்த உணர்வையும் காட்டாமல் எதிரில் உட்கார்ந்தாள்.

‘‘வேலை அதிகமா ஓவியா?’’
‘‘ஆமா…’’
‘‘சரியா சாப்பிட்டியா?’’
‘‘சாப்பிட்டேன் பாட்டி’’
‘‘செல்போன் வேலை செய்யலையா?’’
‘‘செய்யுதே… ஏன்?’’
‘‘உன் அப்பா பேசினான்… உன் செல்போனைத்தான் டிரை பண்ணினானாம்… கிடைக்கலையாம்… அதனால வீட்டுக்கு போன் போட்டான்… உன்னைப் பத்தித்தான் கவலைப்பட்டான்…’’

‘‘அமெரிக்காவைப் பத்தி கவலைப்படச் சொல்லுங்க பாட்டி… அங்கதான் பேங்க், இன்சூரன்ஸ், இன்வெஸ்ட்மென்ட்னு எல்லா கம்பெனியும் தொப்பு தொப்புன்னு விழுந்துகிட்டிருக்கு…’’ காபியை உறிஞ்சியவாறு அவள் நிதானமாகச் சொன்னாள்.

‘‘ஏன் ஓவியா இப்படிப் பேசறே?’’ என்று பாட்டி முகம் சுருங்கினாள்… ‘‘உன்னைப் பத்தி எவ்வளவு கவலை தெரியுமா அவனுக்கு? இருபத்திரண்டு வயசாகுதே, மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்கலாமான்னு நாலு தடவை கேட்டுட்டான்… நகுல்னு ஒரு ஆர்க்கிடெக்ட் பையன் இருக்கானாம் இவன் இருக்கிற அபார்ட்மென்ட்ல… நீ ஒரு வார்த்தை சொன்னா அந்தப் பையனை பேசி முடிச்சுடுவானாம்…’’

‘‘நல்ல ஜோக் பாட்டி…’’
‘‘ஜோக்கா?’’

‘‘இவர் கல்யாணத்தையே இவரால காப்பாத்திக்க முடியலே… இவரு மத்தவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறாராமா? முடிஞ்சா டைவர்ஸ் கேஸ் ஏதாவது கிடைக்குதான்னு பாக்கச் சொல்லுங்க…

மச் பெட்டர்!’’

பாட்டியின் முகம் சிவந்தது. கண்களில் இதுவரை இருந்த மெல்லிய உணர்வு மறைந்தது. எங்கிருந்தோ வெறுப்பு வந்து இமைகளைப் படபடக்க வைத்தது.

காபிக்கோப்பையை இங்கிதம் இல்லாமல் சடக்கென்ற சப்தத்துடன் வைத்துவிட்டு பேத்தியையே அழுத்தமாகப் பார்த்தாள்.

‘‘பேசு ஓவியா… பேசு…’’ என்று எழுந்து கொண்டாள்… ‘‘உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வந்து பிரிஞ்சு போனதுக்கு வேற யார் என்ன செய்ய முடியும்? ஏன் எப்பவும் அப்பாவை தப்பா பேசறே? ரெண்டு கை தட்டினாத்தானே சத்தம் வரும்? உன் அம்மா என்ன சாதாரண ஆளா? குடும்பமே வெட்டரிவாளும் வேல் கம்புமாத்தானே தலைக்கடில வெச்சுகிட்டுத் தூங்கும்?’’ என்றாள் வெடுக்கென்று.

‘‘அய்யோ பாட்டி’’ என்றாள் அவள் ஆயாசத்துடன். ‘‘அடுத்தவங்களைக் குத்தம் சொல்றதை எப்ப நிறுத்தப் போறே? நீயும் ஒரு பெண் பாட்டி… போரோ, கல்யாணமோ, வன்முறையோ எதுலயுமே அதிகமா பாதிக்கப்படுகிறவள் பெண்தான்… என் அம்மா இழந்ததுதான் அதிகம், அப்பாவை விட. தலைவலிக்குது எனக்கு… படுக்கறேன் கொஞ்ச நேரம்…’’

பதிலை எதிர்பாராமல் எழுந்து அறைக்குப் போனாள். பாட்டியும் பின்னலேயே சமையலறைக்குப் போவதையும், பணிப்பெண் ஆயி தேய்த்து வைத்த பாத்திரங்களின் மேல் நீரைக் கொட்டுவதையும் பார்த்துவிட்டு கதவை மூடிக் கொண்டாள்.

இன்னும் பாட்டி அப்படியேதானிருக்கிறாள்.
பாட்டி மட்டுமா?
இல்லை…

வெளியில் ஜீன்சும் குர்த்தாவும் காதுவரை வழியும் தேகமும் பாப் இசையும் ராக் பாடல்களுமாக இருந்தாலும் உள்ளுக்குள்ளே ஜாதிய அகம்பாவம் இன்னும் காட்டு விலங்கைப் போல உலவிக் கொண்டுதான் இருக்கிறது இங்கே.
பிறப்பின் அடிப்படையில் வர்க்கங்கள், பிறப்பின் அடிப்படையில் பேதங்கள், பாவம் அம்மா!

சமூக அவலங்களின் மவுன கூக்குரலைப் பிரதிபலித்து தானும் இரையாகிப் போனவள். கைப்பிடித்த காதலன் கட்சி மாறி தாயின் முந்தானைக்குள் ஒளிந்து கொள்வான் என்று யூகிக்கத் தெரியாதவள். ஆதிக்க மனோபாவம் கொண்ட உயர்நீதி மன்றங்களின் தீர்ப்புகள் ஒருபோதும் எளிய மனிதர்களின் விளிம்பு நியாயங்களுக்கு செவி சாய்ப்பதே இல்லை என உணராதவள்.

காற்று அவள் நெஞ்சுக்கு விசிறுவதைப் போல நெருக்கமாக ஓடி வந்தது. அலமாரியின் திரைச்சீலையை அசைத்து உள்ளே இருந்தவற்றை அசைத்துப் பார்த்தது. மேல்வரிசை ஓரத்தில் அழகாக வீற்றிருந்த மர வண்ணத்துப்பூச்சிப் பொம்மையை சரித்து விட்டது.
அவள் சட்டென நிமிர்ந்தாள்.

மணிமாறனின் நினைவும் வலியும் மெல்ல எழுந்தன.

லதாவும் அவளும் படித்த செங்கல்பட்டு உயர்நிலைப் பள்ளியில் மணிமாறன் அப்போது பனிரெண்டாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.
மகாபலிபுரத்திலிருந்து 2 கிலோமீட்டர் தள்ளியிருந்தது அவனுடைய கிராமம். அப்பா சிற்பி. அம்மா விவசாயத் தொழிலாளி. பொறுப்பான பையன். கல்வி, விளையாட்டு என்று துடிப்பாக இருந்தாலும் தனக்குள் எதையோ தேடிக்கொண்டே இருப்பவனைப் போல ஒதுங்கி ஒதுங்கிச் செல்பவனாக இருந்தான். யாருடனும் பேசுவதில்லை. எதைப் பற்றியும் விவாதிப்பதில்லை. தப்பித்தவறி எந்தக் கண்களையாவது சந்தித்து விட்டால் அவை பயந்து பின்வாங்கும், இவனுடைய கோபம் தெறிக்கும் விழிகளைக் கண்டு. லதா அவனை பொருட்படுத்தவே மாட்டாள்.

படிப்பில் முதலிடம், கோபத்திலும் முதலிடம் என்று எப்போதும் விறைப்பாக இருக்கும் அவனைக் கண்டாலே அவளுக்குப் பிடிக்காது.

“திமிருடி ஓவியா அந்தக் கறுப்பனுக்கு… இவன் கறுப்பா பொறந்ததுக்கு இவன் பொறுப்பா, இல்லே நான் செகப்பா பொறந்ததுக்கு நான் பொறுப்பா? இதெல்லாம் அதிர்ஷ்டம்டி ஓவியா… கொடுப்பினை இருந்தால்தான் அழகா பிறக்க முடியும்… ‘அய்யோ நான் சிவப்பா அழகா பொறக்கலையே’ன்னு வருத்தப்பட்டு தலைகுனிஞ்சா அதுல அர்த்தம் இருக்கு… ‘அதெப்படி நீங்கள்லாம் சிவப்பா பொறக்கலாம், அதெப்படி நீங்கள்லாம் அழகா பொறக்கலாம்’னு வயித்தெரிஞ்சு பொறாமைப்பட்டா அதுல ஏதாவது மீனிங் இருக்காடி ஓவியா? யூஸ்லெஸ்…” என்று திட்டுவாள்.
ஓவியாவுக்கு தோழியின் பேச்சு வருத்தத்தைக் கொடுக்கும்.

தன்னம்பிக்கைக்குப் பதிலாக அழகு ஏன் இவளுக்கு தலைக்கனத்தைக் கொடுக்கிறது என்று தோன்றும். இவளுடைய தகுதியாலோ முயற்சியாலோ, பயிற்சியாலோ கிடைத்த வெற்றிக்கு இவள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அதில் அர்த்தம் இருக்கிறது. அழகில் இவளுடைய பங்கு என்ன? ஒன்றுமே இல்லையே. கொடுப்பினையாம், அதிர்ஷ்டமாம். திறமையாகப் பிறப்பது வேண்டுமானால் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம். திறமை வேறு, அழகு வேறு என்பது லதாவுக்குத் தெரியவில்லை.

ஆனால் மணிமாறனின் விறைப்பும் வெறுப்பும் கூட சரியில்லைதான். கறுப்பாக இருப்பதற்கு ஏன் இவ்வளவு வெட்கப்படுகிறான் என்று புரியவேயில்லை. வெட்கம் கூட இல்லை, அவமானப்படுகிறான். நெஞ்சில் தீயைச் சுமந்திருப்பவன் போல எப்போதும் வெப்பமாக இருக்கிறான்.
ஓவியாவுக்கு அவனுடைய கவிதைகள் பிடித்திருந்தன.

“கறுப்பு நாய்களும்
அண்டங்காகங்களும் கூட
தாகம் தீர்ந்து செல்லும்
பொதுக்கிணற்றில்
எங்களுக்கான
ராட்டினத்தை மட்டும்
கழற்றியெறிந்தது யார்”

இந்த வகையிலான கவிதைகளில் இருந்த ஆதங்கம் பாதி புரிந்தது, பாதி குழம்பிற்று. யாரிடம் கேட்டு விளக்கம் பெறுவது என்று தெரியவில்லை. பாட்டியை விட்டால் வேறு யார் அவளுக்கு? பாட்டி கொடுத்த பதிலால் இன்னும் குழம்பினாள்.

‘‘அது அப்படித்தாண்டி ஓவியா… மனிதர்கள் எல்லாரும் சமம்னு இல்லே… சாஸ்திரத்துல அப்படி சொல்லலே… பூர்வஜன்ம வினை, போன ஜென்மத்துப் பாவம், புண்ணியம்னு எல்லாம் இருக்கு… அந்தந்த ஜென்மாவுல நாம பண்ணினதுக்கு ஏத்த மாதிரிதான் அடுத்தடுத்த ஜென்மங்கள்ல பன்றியா, பறவையா பிறக்கிறோம்… கஷ்டங்களை அனுபவிக்கிறோம்…’’ என்று சொல்லிவிட்டு ஏதோ யோசனையில் பாட்டி ஆழ்ந்துபோக, அவளுடைய பிஞ்சுமனம் வேறு சிந்தனையில் உழன்றது. அதெப்படி சொல்லும் சாஸ்திரம்?

“மக்கள் சமம் இல்லை”யாமே?
எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்கிறானே பாரதி?
இந்த ஜென்மம் மறுஜென்மம் என்றெல்லாம் பயமுறுத்து கிறாளே பாட்டி! யாராவது அப்படி நினைவில் வைத்துக் கொள்ள முடியுமா? நேற்று சாப்பிட்ட மெனுவே இன்று மறந்து விடுகிறதே? போன மாதம் போட்ட உடை நினைவில் இல்லையே? யாராவது சொல்லியிருக்கிறார்களா… ‘போன ஜென்மத்தில் நான் நரியாக இருந்தேன்’, ‘நாட்டிய மங்கையாக இருந்தேன்’ என்றெல்லாம்! அப்படிச் சொன்னால் அதற்கு சாட்சிதான் உண்டா!
மைதானத்தில் கூடைப்பந்து விளையாட்டு முடிந்து சற்று தாமதமாகக் கிளம்பி வந்தபோது ஒற்றை வயல் தெருவில் அவன் வேகமாக தலையில் கூடையுடன் நடந்து செல்வதைப் பார்த்தாள்.

‘‘நில்லு மணிமாறா… நில்லு…’’ என்று கைகாட்டினாள்.
தயக்கத்துடன் நின்றான்.
‘‘என்ன?’’ என்றான் கடினமாக.
‘‘உன் கவிதை படிச்சேன்… அருமையா இருந்துச்சு…’’ என்று புன்னகைத்தாள்.
‘‘ம்…’’ என்றான் முகம் பார்க்காமல்.
‘‘அது நிஜமா மணிமாறா?’’
‘‘ஆமா…’’
‘‘பொதுக் கிணத்துல தண்ணி விடறதில்லையா?’’
‘‘இல்லே…’’
‘‘அது தப்பில்லையா? தண்ணி என்கிறது இயற்கையோட பரிசுதானே? எல்லாருக்கும் பொதுதானே?’’
சடாரென அவன் பார்வை அவள் பக்கம் திரும்பியது. கண்களில் மின்னல் போல மென்மை வந்துவிட்டுப்போனது.
‘‘ஒப்புக்கறியா நீ? நிஜமாவா?’’ என்றான்.
‘‘பின்ன? எனக்கு உனக்குன்னு எதையும் பிரிச்சு வெக்குறது எனக்குப் பிடிக்காது மணிமாறா…’’
‘‘அப்படின்னா… நீ சாதி வித்தியாசம் பார்க்க மாட்டாயா?’’ என்றான் அதே வியப்புக்குரலில்.
‘‘கண்டிப்பா பாக்க மாட்டேன்…’’
‘‘உன் வீட்டுல?’’
‘‘நல்லா பார்ப்பாங்க… என் தாய், தாழ்த்தப்பட்ட சாதிக்காரி என்கிறதாலே என் பாட்டி குத்திக் குத்திப் பேசி அப்பா அம்மாவை சண்டை போட வெச்சாங்க… சட்டப்படி அவங்க பிரியவும் காரணமா இருந்தாங்க…’’
‘‘அய்யோ…’’ என்றான் அவன் கவலையுடன்.
கூடையை கீழே வைத்தான். அப்போதுதான் அவள் கவனித்தாள். கூடை நிறைய வண்ணத்துப் பூச்சிகள்.
மரத்தால் செய்யப்பட்ட அழகான ரகம் ரகமான பட்டாம்பூச்சிகள்.
வர்ணம் பூசப்பட்டு சிறகும் உடலுமாக பளபளக்கும் பட்டாம் பூச்சிகள்!
‘‘அய்… இதென்ன? எங்க கொண்டுட்டுப் போற மணிமாறா? யார் செஞ்சது இதெல்லாம்?’’ என்றாள் கண்கள் விரிய.
‘‘நான் செஞ்சதுதான்…’’ என்று இளம் மஞ்சளும் கருமையும் சேர்ந்த வண்ணத்துப்பூச்சியைக் கையில் எடுத்தான். ‘‘என் அப்பா பல்லவபுரத்து கலைக்கூடத்துல சிற்பி… வீட்டுல எப்பவும் கல்லும் சிற்பமும்தான்… விடுமுறைல நான் இந்த மாதிரி மர விளையாட்டு சாமான்கள் செய்வேன்… பணம் கிடைக்கும்… ஸ்கூல் திறந்ததும் எனக்கு, தம்பி தங்கைக்கு ஃபீஸ் கட்ட வசதியா இருக்கும்… ஓவியா, இது உனக்கு…’’ என்று நீட்டினான்.
‘‘அய்யோ… ரொம்ப அழகு… காசு இல்லையே இப்ப என்கிட்ட?’’ என்று வாங்கிக் கொண்டாள், ஆசையுடன்.
‘‘உன்கிட்டே இருக்கிற நேர்மையான மனசுக்கு என் சின்னப் பரிசு இது ஓவியா… வரட்டுமா?’’ என்று கூடையைத் தூக்கிக்கொண்டு அவன் நடந்தான்.
வண்ணத்துப்பூச்சி பறந்துவிடப் போகிறதோ என்ற செல்லக் கவலையுடன் அவள் உள்ளங்கையை மூடிக் கொண்டாள்.

-

வி.உஷா

(தொடரும்)

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions