இப்போதெல்லாம் திருமணங்களுக்குச் செல்வதை அவன் தவிர்த்து வருகிறான். இன்னின்ன காரணங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்ல அவனால் முடியாது. ஆடம்பரமான முகப்புகளா, கொதிக்கக் கொதிக்க பவே அயிட்டங்களா, புதுப்புது நகைகளும் புதுப்புது புடவைகளுமாக வளைய வரும் பெண்களா, ஸென்னிலும் இன்னோவாவிலும் வந்திறங்கும் இளம் தொந்தி ஆண்களா, இல்லை எல்லாமேவா என்று தெரியவில்லை. ஏதோ பிடிக்கவில்லை, அவ்வளவுதான். ஆனால், அடிமன ஆழத்தில் தங்கி வடுவாகிவிட்ட அந்த காதலும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்!
இதோ இந்த கல்யாணத்திற்கு அவன் வந்திருக்கிறான், ரொம்ப ரொம்ப காலத்திற்குப் பிறகு. கலாவதியின் அதீத வற்புறுத்தல் காரணமாக.
‘‘இத பாருங்க… ராகினி வாயாடி… நாலு வீடு தள்ளி இருக்கிறவ… அடுத்த எலெக்ஷன்ல நான்தான் கவுன்சிலர்னு சொல்லிகிட்டிருக்கா… செஞ்சாலும் செய்வா… அவளைப் பகைச்சுக்கறது நம்ம தலைல நாமளே மண் அள்ளி போட்டுக்கற மாதிரி… சிரமம் பாக்காம வந்துடுங்க…’’
‘‘சிரமம் என்ன சிரமம்? டாக்ஸில ஏறிப்போகப் போறோம், பாட்டு கேக்கப்போறோம், வகை வகையா சாப்பிடப் போறோம், திரும்பி வரப்போறோம்… சோபாவுல ஒக்காந்து டிவி பாக்கறதுக்கு இது உருப்படியான வேலைதான் கௌம் புங்க… நவீனுக்கு ட்ரஸ் மாட்டி விடுங்க… லயாவை நான் பாத்துக்கறேன்’’
அமைதியாகத்தான் ஆரம்பிப்பாள். ஆனால், நெஞ்சில் ஒரு குத்து குத்திவிட்டுத்தான் முடிப்பாள். முதலில் இது வெகு அதிர்ச்சியாக இருந்தது. உருவத்தில் ஆரம்பித்து, படிப்பு, வேலை, குடும்பம், வசதி என்று ஏதாவது ஒன்றை குத்திக்காட்டாமல் அவளால் பேச்சை நிறுத்த முடியாது என்பது தெரிந்தபோது ஆவென்று அவன் களைத்துப் போனான்.
‘மாதவி மாதவி’ என்று நெஞ்சு துடிக்க ஆரம்பித்தது அப்போதுதான்.
‘‘என்னங்க யோசனை? பாருங்க நவீன், வாசப்பக்கமா எங்கேயோ ஓடறான்… டேக் கேர் ஒப் ஹிம்… நல்ல புரோவிசர், ஒப்சென்ட் மைண்டட் புரோவிசர்…’’
‘‘நான் பாத்துக்கறேன் கலா, நீ ஏன் தொணதொணன்னு? போ, உன் ரூபி செட்டை கமலாவுக்கு காட்டு…’’
‘‘ம்! இந்த நக்கல் பேச்சைத் தவிர வேற என்ன உருப்படியா தெரியும் உங்களுக்கு?’’
உள்ளுக்குள்ளே அவன் விரக்தியுடன் சிரித்துக் கொண்டான்.
மாதவி! மாதவி! என் கண்ணே! எப்படி இருக்கிறாய்? எங்கே இருக்கிறாய்? அந்த மழைக்காலம் எங்கே போனதடி கண்ணே? நீயும் நானும் நடந்து போவோமே, அந்த மழைமரங்கள் அடர்ந்த தெருவில், நினைவிருக்கிறதா கண்ணே? துப்பட்டாவை விரல்களால் நீ திருகும் போதெல்லாம், என் நெஞ்சே திருகப் படுவதாக உணர்வேனே, அதை நீயும் உணர்ந்து சிரித்து வெட்கப்பட்டு தலைகுனிவாயே… மறக்கவே முடியாத அந்த மூன்று வருடங்கள்! தினம் தினம் நமக்காகவே விடியும் கிழக்கு. நம் சந்திப்பிற்காகவே காத்திருக்கும் அலைகள். எவ்வளவு பேசுவோம்? உன் கண்களில் தெரியும் நட்சத்திரங்களின் மின்னலை, புன்ன கையில் வெளிப்படும் நிலவின் குளுமையை, ஒவ்வொரு வார்த்தையும் தேர்ந்தெடுத்துப் பேசுவாயே, அவற்றில் தெறிக்கும் மலர்ச்சிதறல்கள் என்று மாதவி மாதவி எல்லாவற்றிலும் மாதவிதானே?
அதுமட்டுமல்ல பெண்ணே, நம் அன்பின் வலிமையின் அஸ்திவாரம் வெறும் அழகல்ல. அது ஒரு போனஸான வரப்பிரசாதம் என்றா லும், உண்மையான அடித்தளம் வேறுதான். எனது வெற்றிகளுக்காக நீ தவமிருப்பாய். உன் சந்தோஷங்களுக் காக நான் தவிதவிப்பேன்.
‘எதிர்பார்த்து விதைக்காதீர்கள். இந்த பூமி அதை திருப்பித் தராது. இது காதல் பூமி. எதிர்பார்த்து விதைப்பதை காதல் ஒருபோதும் அறுவடை செய்யாது’ என்று சொன்ன ரோஸெட்டியின் வரிகளை அடிப் படையாக வைத்து நான் தினம் தினம் கவிதை எழுதுவேன். நிச்சயம் உனக் காகத்தான். வெட்கமும் மகிழ்ச்சியுமாக அதை நீ ரசித்துப் படித்தாலும் பரிதவிப்புடன் என்னைப் பார்ப்பாய்.
‘‘கிரிதர்… எல்லாக் கவிதையுமே அழகுதான்… ஏனென்றால் காதலே அழகுதானே? ஆனால், நீங்கள் இதற்கு மட்டும் படைக்கப்பட்டவரல்ல. காதலைத் தாண்டிய சமூக விழிப்புணர்வும் அவலமும் மேம்பாடும் பற்றி உங்கள் சிந்தனைகள் பரவி புதுப்புது கவிதைகளைப் படைக்க வேண்டும் கிரிதர்… என் மனப்பூர்வமான விருப்பம் இது…’’ என்று சொல்வாயே…
வெறும் வார்த்தை ஜாலமல்ல உன்னுடையது. கெப்பர், பர்னஸ், பெய்லி, காஃப்கா என்று உலகத்தர புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுப்பாய். செயல்கள் சாதனைக்கு வழிவகுக்கலாம். ஆனால், செயல்களுக்கு அடிநாதமாக இருப்பவை உணர்வுகள்தான். அத்த கைய உணர்வுகளை ஊட்டக் கூடியவை எழுத்துகள்தான் என்பதை புரிய வைத்தாய்.
அதே சமயத்தில் உனக்காக நான் எவ்வளவு தவித்தேன் மாதவி? உனக்குள் இருந்த ஓவியத்திறமை என்னை பிரமிக்க வைத்தது. ‘வறுமைக்கு அப்பால்’ என்று பெயரிட்டு ஒரு ஓவியம் வரைந் திருந்தாய். கடல்மண்ணை வைத்து ஒரு சிறுமி சிற்பம் வடிப்பதாக. போரில் சிக்கிய பட்டினிச்சிறுமி போன்ற அந்த ஈர்க்குச்சி உடல்வாகு, செதில்செதிலான மணல், தூரத்தில் கடல், ஒட்டிப்போன வயிற்றுடன் இருந்தாலும் அந்த ஏழைவிழிகளின் ஜொலிப்பு என்று உலகத்தரமான ஓவியம் அது. என் மாதவியிடம் கொட்டிக்கிடந்த கலைத்திறமையை அன்றுதான் முழுமையாகத் தெரிந்து கொண்டேன்.
மாதவி! நினைவிருக்கிறதா கண்ணே…
ஒருவருக்கொருவர் உயிர் என்றானபின், நாம் சந்தித்த ஒவ்வொரு நாளும் எனக்காக கவிதைகளைப் பற்றி நீயும், உனக்காக ஓவியங்கள் பற்றி நானும் பேசுவோம். என் திறமை மெருகேற்றப்படவேண்டும் என்று நீ தவிப்பாய். உன் ஓவிய தாகம் அதிகரிக்க என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று நான் பரிதவிப்பேன்.
உண்மையான காதலுக்கு பரஸ்பர மரியாதையே அடிப்படை என்று பின்னாளில் எங்கோ வாசித்தபோது வலியுடன் கண்களில் நீர் வந்தது.
நாம் பிரிந்தோமே அந்த மழைநாளில், அப்போது கூட அமைதியுடனான அதிகப்படி வலியுடன் அந்த நீர்தான் வந்து கொண்டே இருந்தது.
‘‘மசமசன்னு அப்பப்ப நின்னுக்கிட்டு என்னதான் யோசனை பண்ணு வீங்களோ? பாருங்க வரிசை எப்படி வாலாட்டம் போயிட்டே இருக் குன்னு… அப்பவே சொன்னேன் முதல்ல போய் எடம் பிடிங்கன்னு… சுறுசுறுப்புன்னா ஸ்பெலிங் என்னன்னு கேக்கற குடும்ப ம்பா…’’
கலாவதி அடிக்குரலில் முகம் மாறாமல் எரிதழலைக் கொட்டினாள்.
‘‘குழந்தைகளை நான் பாத்துக்கறேன் கலா… நீ போ… கிஃப்ட்டை கொடுத்துட்டு வா…’’ என்றான் அவள் பக்கம் திரும்பாமல்.
‘‘சமயம் பாத்து கழட்டி விடுங்க…’’ கலாவதி வெடுக்கென்று திரும்பிப் போனாள்.
அப்போதுதான் பார்த்தான்.
அவள்… அவள்… மாதவியா? அவள்தான்! அவளேதான்!
விர்ரென்று பம்பரம் போல அவன் உடல் சுழன்றது. இதயத்தின் துடிப்பு கணக்கிடமுடியாமல் தாறுமாறாக இருந்தது.
எட்டு வருடங்கள் அவளிடம்பெரிய மாறுதல் எதையும் ஏற்படுத்தி விடவில்லை. மென்மையான முகம். அதே அளவான தேகம். எளிமையான அலங்காரம். உறுத்தாத நிறத்தில் பட்டுப்புடவையும் அழகிய கழுத்தா பரணமும் எப்போதும் இருக்கிற இளநகையுமாக மாதவி தன் நாலு வயது குழந்தையைக் கையில் பிடித்தபடி நின்றிருந்தாள்.
மாதவி! நீதானா? நீயேதான்! உன் அழகு முகம், அழகுப் புன்னகை, அழகு உடை எதுவுமே மாறவில்லை. நீ நீயாகத்தான் இருக்கிறாயா? உன் குழந்தையா? அப்படியே அச்சு அசலாக உன் முகம்! அதுவும் எவ்வளவு அழகு! இது போதுமடி எனக்கு! அந்த அடியிலிருந்து என்னைப் போலவே நீயும் மீண்டு விட்டாய். வேறு வழியில்லையே… பாழும் உயிரை போக்கிக்கொள்ள வழிவகை தெரியவில்லையே.
மாதவி! ஒரு விஷயம் தெரிய வேண்டும். கட்டாயம் தெரிய வேண்டும். நீ இன்னும் வரைந்து கொண்டிருக்கிறாயா? உன் ஆர்வம் மங்காமலிருக்கிறதா? உன் கணவன் உறுதுணையாக இருக்கிறானா? ‘வறுமைக்கு அப்பால்’ போல தீவிரமான சித்திரங்கள் என்னவெல்லாம் தீட்டியிருக்கிறாய் மாதவி? தினம் ஒரு தடவையாவது உன் விழிகள், இழந்த காதலுக்காக ரத்தக்கண்ணீர் வடிக்குமா? மானசீக மனத்திரையில் நம் பழைய தினங்கள் உயிர்த்துடிப்புடன் வந்து போனபடியே இருக்குமா? மாதவி! மாதவி! கேட்க வேண்டும். கேட்க வேண்டும். இதற்கெல்லாம் பதில் தெரிய வேண்டும். தெரிந்தால் கொஞ்சத்திற்கு கொஞ்சம் சமாதானம்… அவ்வளவுதான். அவன் படபடப்புடன் காத்திருந்தான்.
மாதவியும் அவனைப் பார்த்துவிட்டாள். நெஞ்சம் கனக்க தலை குனிந்து கொண்டாள். கிரி! கிரி! நீங்களா? நீங்களா?
தொண்டை அடைத்துக் கொண்டது. மழைநாளின் முழுநினைவுகளும் அமிலவார்ப்பாக உடலைச் சுட்டன. கிரிதர்! கிரிதர்! நாம் சந்திக்கக்கூடாது கிரிதர்! இழந்த இன்பங்களை நினைத்துப் பார்க்கவே தாங்க முடியாத துன்பமாக இருக்கும்போது நேரில் நின்று பார்ப்பது மகா கொடுமை கிரிதர்!
மாதவி தனக்குள் அழுதாள். தன் கட்டுப்பாட்டை மீறி கண்கள் அவன் பக்கம் செல்வதை பலவீனத்துடன் பார்த்தாள்.
எட்டு வருடங்களில் அவனிடம் பெரிய மாற்றம் எதுவுமில்லை. அளவான உடல். கம்பீர முகம். தெளிவான சிந்தனையில் வெளிப்படும் நேர்மையான பார்வை. கிரி! கிரி! இன்னும் அந்த மென்மையான நெஞ்சம் என்னை சுமந்திருக்கிறதா? தினம் தினம் ஒரு தடவையாவது உன் கண்கள் நம் காதலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறதா? கிரி! கிரி! என்னருமை கிரிதர்! எப்படி வாழ்கிறோம். ஏன் வாழ்கிறோம் என்று புரியாமலே மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன். கிரி! நீங்களும் அப்படித்தானா? அப்படித்தானா?
கவிதைகள் இப்போது ஊற்றெடுக்கிறதா கிரி? எழுதுகிறீர்களா? எந்தப் பெயரில்? எந்தப் பத்திரிகைகளில்? உங்கள் ஆர்வம் வளர்ந்து கொண்டுதானே இருக்கிறது? உங்களுக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணைவி, உங்கள் அருமை புரிந்தவளா? பொக்கிஷத்தை வைத்துக் காப்பாற்றும் பொறுப்பு நிறைந்தவளா-? கிரி! கிரி! தெரிய வேண்டும் கிரி. பதில்கள் தெரிய வேண்டும். அப்போதுதான் என் இருண்ட வாழ்வின் சிறுஜன்னலாவது திறக்கும்.
அடுத்த பத்தாவது நிமிடம் அந்த சந்திப்பு நிகழ்ந்தது.
கிரிதர் புன்னகையுடன் மனைவி பக்கம் திரும்பி,
‘‘கலா… இவங்க மாதவி… என் கூட பி.எஸ்சி. பிஸிக்ஸ் படிச்சாங்க… நல்லா வரைவாங்க… மாதவி, இது கலாவதி… சிட்டி பாங்கில ஆஃபிஸர்… வெரி ப்ரில்லியன்ட் பர்ஸன்…’’ என்று அறிமுகப்படுத்தி புன்னகைத்தான்.
மாதவி அதே புன்னகையுடன்,
‘‘இது என் ஹஸ்பெண்ட் கவுதம்… சீமென்ஸ்ல இருந்தார்… இப்போ தனியா பிஸினஸ் பண்றோம்… ரொம்ப தங்கமான குணம்… கோபமே வராது… கவுதம், இது கிரிதர்… கிளாஸ்மேட்… கவிதை, பாட்டுன்னு கலக்குவாரு அந்த காலத்துல…’’ என்று சொல்லிச் சிரித்தாள்.
கூட்டம் அலைமோதி இரண்டு குடும்பங்களையும் விலக்கி விட்டது.

