தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் நாகேஷ்!

நினைவுத் துளிகள்…

தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் நாகேஷ் மறைந்து விட்டார். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. பொதுவாக காமடி நடிகர்கள், ஹீரோவாகவோ, குணச்சித்திர கேரக் டர்களிலோ நடிக்கிற போது, பார்வையாளருக்கு சிரிப்புதான் வரும். காமடியனாக பார்த்துப் பழகிய அந்த முகத்தை வேறு கேரக்டரில் பொருத்திப் பார்ப்பது நெருடலாகவே தோன்றும் ரசிகர்களுக்கு. நாகேஷ் விதிவிலக்கு. மூன்று தலைமுறை நடிகர்களுடனும், பல படங்களில் சிரிப்பு ராஜாங்கம் நடத்தினாலும், ஏற்றுக் கொள்கிற கேரக்டராக மாறி, ரசிகனையும் அந்தப் பார்வைக்குத் தயார்படுத்தும் வித்தை தெரிந்தவரா இருந்தவர் நாகேஷ்.
நகைச்சுவை ஜாம்பவானுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் சக நட்சத்திரங்கள் சிலர்…

“மானமுள்ள மறுதாரம்”, நாகேஷோட எனக்கு முதல் படம். அப்புறம் நிறைய படங்கள் பண்ணியிருக்கேன் அவரோட. ரெண்டு பேரும் கன்னடத்துல பேசிப்போம். நிறைய சம்பளம் வாங்கிற நடிகையா நான் இருந்த காலம் அது. “உன் அளவுக்கு நானும் சம்பளம் வாங்கறேன். நீ ஒரு படத்துல நடிச்சு வாங்கதை, ஒரே நேரத்துல பத்து படம் பண்ணி நான் வாங்கறேன் பாரு”னு என்னைக் கிண்டல் பண்ணுவார். சொந்த வாழ்க்கைல நிறைய பிரச்னைகளை சந்திச்ச காலக் கட்டத்துலகூட, அதையெல்லாம் ஒருநாள் கூட ஷூட்டிங் ஸ்பாட்ல காட்டிக்கிட்டதே இல்லை அவர். எப்பவும் கலகலனு இருந்துக்கிட்டு, மத்தவங்களையும் சிரிக்க வைப்பார். உடம்பு சரியில்லாம இருந்தப்ப அவரைப் பார்த்தேன். “நீங்க சினிமாவே வேணாம்னு ஒதுங்கினாகூட, சினிமா உங்களைவிட்டு ஒதுங்காது”னு சொல்லிட்டு வந்தது இப்பவும் நினைவிருக்கு… “யாராலயும் ஈடுகட்ட முடியாத நடிகர் நாகேஷ்” என நெகிழ்கிறார் மூத்த நடிகை சரோஜா தேவி.

“எல்லா நடிகருக்குள்ளயும் நாகேஷோட சாயல் கட்டாயம் இருக்கும். எனக்கு எல்லாக் காலத்துலயும் அவர்தான் இன்ஸ்பிரேஷன். “நம்மவர்” படத்துல அவர்கூட நடிச்ச அனுபவம் எனக்கு இப்பவும் மறக்கலை. நம்ம எல்லாருக்குள்ளயும் வாழ்ந்திட்டிருக்கிற ஒருத்தர்னா அவர்தான் நாகேஷ். குண்டான, ஒல்லியான, குள்ளமான, உயரமான நாகேஷை ஒவ்வொரு நகரத்துலயும், கிராமத்துலயும் பார்க்கலாம். நாகேஷை பார்க்கிற எல்லாருக்கும், தன்கிட்ட உள்ள ஏதோ ஒண்ணு அவர்கிட்ட பிரதிபலிக்கிறதை உணர்வாங்க. சில சமயங்கள்ல என்னோட செயல்கள்லயேகூட தெரிஞ்சோ, தெரியாமலோ அவரோட குணாதிசயங்கள் பிரதிபலிக்கிறதை உணர்ந்திருக்கேன். அவரோட காலக்கட்டத்துல எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், தன்னோட தனித்தன்மையால தனியா தெரிஞ்சவர் நாகேஷ்.

கே.பாலசந்தர் நாகேஷை வச்சு பல பிரமாதமான படங்களைக் கொடுத்தவர். ரெண்டு பேர்ல யார் திறமைசாலினு யோசிக்க வைக்கிற அளவுக்கு இருக்கும் அந்த காம்பினேஷன். என்னை மாதிரியே நாகேஷோட ரசிகர் கே.பி சார். நாகேஷுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சாங்கன்னா, தலைவர் பதவிக்குப் போட்டி போடறவங்க நானும், கே.பி சாருமாதான் இருப்போம். எப்படியாவது அந்தப் பதவியை நான் வாங்கிடுவேங்கிறதும் நிஜம்!

நாகேஷை நான் முதல்ல எப்ப சந்திச்சேன்னு நினைவில்லை. திரையில பார்த்து, நம்மகூடவே வளர்ந்து, என்னவோ பல காலம் நமக்குப் பழக்கமானவர் மாதிரித் தெரியறவர் நாகேஷ். அவர் 100 வருஷம் வாழ்ந்திருக்கணுங்கிறதுதான் எல்லாரோட ஆசையும். ஆனா உடல்நலத்தைக் கவனிக்காம, 20 வருஷங்கள் முந்திக்கிட்டார். இன்னும் பல நூற்றாண்டுகள் போனாலும் அவர் ஈடு இணையில்லாத ஒரு நடிகர். சிவாஜி, எம்-.ஜி.ஆர் அளவுக்கு முக்கியத்துவமுள்ள நடிகர் அவர். அவர் நினைச்சிருந்தா, தேசிய, சர்வதேச புகழ் எல்லாம் தேடி வந்திருக்கும். அப்படி எதையும் விரும்பாத மாமனிதர் அவர். ரொம்பவும் எளிமையான, தேவைக்கு அதிகமாகவோ, குறைவாகவோ எதையும் எதிர்பார்க்காம வாழ்ந்து காட்டினவர்!”, நாகேஷ் பற்றிப் பேச ஆரம்பித்தால் தன்னை மறக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

“அவரைப் பார்த்து வியந்து போக மட்டும்தான் என்னால முடியும். அவர் இறந்த அன்னிக்குக் கூட எங்கம்மாவும், அப்பாவும் நாகேஷ் நடிச்ச படத்தைத்தான் டி.வில பார்த்திட்டிருந்தாங்க. அதுதான் அவர் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வச்சிருந்த ரகசியம். இப்பவும் “தில்லானா மோகனாம்பாள்” பார்த்துட்டு, அப்படியொரு கேரக்டரை எப்படி இவரால இத்தனை அனாயாசமா செய்ய முடிஞ்சதுனு வியந்து போவேன்…” என்கிறார் வடிவேலு.

“நான் ஸ்கூல்ல படிச்சிட்டிருந்த காலத்துலயே நாகேஷ் சார் எனக்கு அறிமுகம். என் நண்பன் மூலமா ஆரம்பிச்ச அந்த அறிமுகம், கொஞ்சம் கொஞ்சமா நட்பாச்சு. எனக்கு சினிமால ஆர்வம் வரவும் அந்த நட்புதான் அடிப்படை. நாகேஷ் சார் வீட்டுக்குப் பக்கத்து வீடு விலைக்கு வந்தப்ப, உடனடியா அதை வாங்கி, அவருக்குப் பக்கத்துலயே குடியேறினேன். அதுக்குப் பிறகு எங்க நட்பு இன்னும் நெருக்கமாகவும், ஆழமாகவும் மாறினது. நான் டைரக்டரான பிறகு, நாகேஷ் சாருக்காகவே என் படங்கள்ல கேரக்டர் உருவாக்க ஆரம்பிச்சேன். “சேரன் பாண்டியன்”ல தொடங்கி, லேட்டஸ்ட்டா “தசாவதாரம்” வரைக்கும் அப்படித்தான். நாகேஷ் சாரை நான் சந்திக்காம இருந்திருந்தா, என் வாழ்க்கை வேற பாதைல போயிருக்கும். என்னோட நகைச்சுவை உணர்வுக்கும் அவர்தான் இன்ஸ்பிரேஷன். என் உயிரைக் காப்பாத்தின நல்ல நண்பரும் கூட. ஒரு ஷூட்டிங்ல கோதாவரி ஆத்துல நான் அடிச்சுக்கிட்டுப் போனப்ப, கத்தி, கூச்சல் போட்டு, குச்சியை நீட்டி, என்னைக் காப்பாத்தினவர் நாகேஷ் சார்.

“தசாவதாரம்” பார்த்துட்டு, தமிழ் சினிமாவை கற்பனைக்கெட்டாத உயரத்துக்குக் கொண்டு போயிருக்கிறதா என்னையும், கமல் சாரையும் பாராட்டினார். இறக்கிறதுக்கு ஒன்றரை மாசத்துக்கு முன்னாடி, “நீ வாழ்க்கைல நல்லா வருவே”னு சொன்னார். அந்தக் குரல் எப்பவும் எனக்குள்ள எதிரொலிச்சுக்கிட்டே இருக்கும்…”, நினைவுகளில் கரைகிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

-அமுதன்

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions