இன்று புதிதாய்ப் பிறந்தோம்..

Swami Vivekanandaநாகரிக ஓட்டத்தில் ஒற்றையடிப்பாதைகள் தெருக்களாகின்றன. பற்றைக்காடுகள் பகட்டு மாளிகைகள் ஆகின்றன. மனிதனின் மனமும் அதில் தோன்றும் எண்ணங்களும் எல்லையற்ற மாறுதல்களுக்கு உட்படுகின்றன. உடலுணர்விலிருந்து உள்ளத்திலெழும் ஆசைகள் வரை மனிதன் அடையாத மாறுபாடுகள் இல்லை.

குழந்தையாய், சிறுவனாய், இளைஞனாய், முதியவனாய் மாறுபட்ட உடல் மாற்றத்திற்கும் வரையறையற்ற உளமாற்றத்திற்கும் உட்படுகின்றான் மனிதன். இவன் எங்கே அதிக சவால்களுக்கு முகங்கொடுக்கிறான்? நிச்சயமாக வாலிபப் பருவத்தில்தான். “உயர்ந்த எண்ணங்கள் உயர்ந்த வாழ்க்கையை உருவாக்குகின்றன.” என்பதற்கேற்ப எண்ணங்களைத் தனக்குள் வடிவமைத்து உயிரூட்டிச் செயற்படுத்த விளையும் பருவம் வாலிபப் பருவம். சவால்களை நேருக்கு நேர் சந்திக்க முனையும் பருவம் வாலிபப் பருவம். இன்று அவன் அந்தப் பருவத்தை செம்மையுறப் பயன்படுத்துகிறானா? அல்லது தன் இனிய இளமைக்காலத்தை இருட்டில் தொலைத்து விட்டு முதுமையில் ஒளியைத் தேடும் நிலைக்குத் தள்ளப்படுகிறானா? தன் வாழ்க்கையில் தனக்கென ஒரு இலட்சியத்தை வகுத்து அதை அடையும் முயற்சியில் இறங்கி வெற்றிபெறுபவர்கள் இன்று எத்தனை பேர்? இத்தகைய கேள்விகளுக்கு பதில் என்னவாக இருக்கமுடியும்? பதில் இருக்கிறது! இளைஞர்களின் இதயத்துடிப்பை அன்பு நிறைந்த ஆணித்தரமான கருத்துகளால் அதிகரிக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

“ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கையாக்கு. அதையே கனவு காண். அந்தக் கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள் உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இதுதான் வழி.” என்கிறார் அவர்.

சற்று எண்ணிப்பாருங்கள்! எவ்வளவு பெரிய வாழ்க்கை நம்முன் பரந்து விரிந்து கிடக்கின்றது! நேற்று இருந்தவன் இன்றில்லை. நாளை என்னவோ! நமக்குந் தெரியாது. காலங்களைத் தனக்குள் விழுங்கி கடுகதியில் செல்லும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் ஒரு உறுதியான இலட்சியத்தை வரையறுப்பதே இன்றைய இளைஞனின் முக்கிய தேவை. மிகப்பெரும் சவால். இதற்கு அளவற்ற மனவலிமையை அவன் பெற்றிருக்க வேண்டும்.

இரும்பு போன்ற தசைகளும், எஃகு போன்ற நரம்புகளும், எதனாலும் தடுக்க முடியாத வஜ்ராயுதம் போன்ற அளவற்ற மனவலிமையும் வாய்ந்தவர்களே நம் நாட்டிற்கு இப்போது தேவை. இந்த அண்ட சராசரங்களின் அந்தரங்க இரகசியங்களை யெல்லாம் ஊடுருவி ஆழ்ந்து அறியக்கூடிய மனவலிமை. ஆழ்ந்த கடலின் அடித்தளத்திற்கு போக வேண்டியிருந்தாலும் மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிவந்தாலும் எடுத்த காரியத்தை எவ்வாறேனும் முடிக்கும் அஞ்சாநெஞ்சம். இவையே நமக்கு இப்போது வேண்டும். என்று அறை கூவி அழைக்கிறார் நமது விவேகானந்தர். “மனதில் உறுதி வேண்டும். வாக்கினிலே இனிமை வேண்டும்.” என்று பாடுகிறார் மகாகவி பாரதியார். ஒரு உறுதியான மனத்தால் மட்டுமே இலட்சியத்தை அடைவதற்குரிய உந்துசக்தியை அளிக்கமுடியும் என்பது சான்றோர்களின் முடிந்த முடிபு.

பொதுவாகவே மனத்தை “வெறி பிடித்த குரங்கிற்கு தேள் கொட்டியது போல” என்ற உவமைக்கு ஆன்றோர்கள் ஒப்பிடுகின்றார்கள். அப்படியாயின் அது எவ்வளவு தூரம் நிலையற்ற தன்மையைக் கொண்டிருக்கிறது என எண்ணிப் பாருங்கள்! அதுவே இளைஞர்களின் மனமென்றால் சொல்லவும் வேண்டுமா! ஆறாத காயங்களையும் மாறாத வடுக்களையும் கடந்த காலத்திற்குள் தொலைத்துவிட்டு எதிர்காலச் சாதனைகளை எண்ணாமல் நிகழ்கால மது மயக்க போதைகளுக்கு அடிமைப்பட்டு சின்னாபின்னமாகும் இளைஞர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்!

இதற்காகவா எத்தனையோ கனவுகளை சுமந்து அவனுடைய தாய் அவனை ஈன்றெடுத்திருப்பாள்? இல்லையே! துயரமான கடந்த காலம் நமக்கு ஒன்றும் செய்துவிடப் போவதில்லை. அது மறக்கப்பட வேண்டியதே! தெளிவற்ற எதிர்காலம் நமக்காகக் காத்திருக்கப் போவதில்லை. அது அடையப்பட வேண்டியதே! நிகழ்காலம் மட்டுமே நிச்சயமானது. அதுவே பயன்படுத்தப்பட வேண்டியது.

“எனது வீர இளைஞர்களே! நீங்கள் அனைவரும் மகத்தான காரியங்களைச் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். ஓ! இளைஞர்களே! எழுந்து வாருங்கள்! நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகள்! அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெர்றவர்கள்.”என்று முழங்குகின்றார் சுவாமி விவேகானந்தர்.

எத்தனையோ பேர் தங்கள் வாழ்க்கையை அற்புதமாக வாழ்ந்து முடித்த வரலாற்றுப் பக்கங்கள் எம்முன் மலையாகக் குவிந்து கிடக்கின்றன. அதனைக் கண்டபின்னரும் கூட மனத்தில் “சரி! நாளைக்குப் பார்க்கலாம்” என்று எண்ணும் எண்ணத்தை இளைய தலைமுறையினராகிய நாம் தூக்கி எறிந்து விடுவோம்.

அழகான இயற்கைக் காட்சிகள் முதல் ஆனந்தமான அறுதிப்பொருள் வரை அணு அணுவாக வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுவோம். உடல், மனம், ஆன்மா என்று படிப்படியாக வளர்ச்சியடைவதே வாழ்க்கை என்பதை உணர்ந்து கொள்ளுவோம். நரம்புகளை முறுக்கேற்றி உடலை வலிமைப்படுத்தி, தினசரி தியானம், சிறந்த சிந்தனைகள் என்பவற்றால் மனத்தை ஒருநிலைப்படுத்தி, எம்மை நாம் உணர்ந்து கொள்ளும்வரை, எம் ஆன்மாவிற்கான தேடலிலிருந்து சிறிதும் வழுவாதிருப்போமாக!
நேற்றைய கவலைகள், நாளைய மயக்கங்கள் என்பவற்றை எண்ணி வருந்தாமல், பாரதி கூறியது போன்று இன்று புதிதாய்ப் பிறப்போமாக!.

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions