“நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…’, ‘அடியே கொல்லுதே…’ – வாரணம் ஆயிரம் படப் பாடல்களின் பி.ஜி.எம். எங்கேயாவது ஒலித்தால் போதும். கேட்கிறவர்களின் கைகள் தம்மை அறியாமல் கிடார் வாசிக்கிற பொசிஷனுக்கு போகும்!
கீ போர்டும் டிரம்ஸும் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த பின்னணி இசையில், கிடாருக்கு அந்தஸ்து கொடுத்திருக்கிறது இந்தப் படம். “அப்படியா? கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு” – சுத்த தமிழில் அடக்கமாகப் பேசுகிறார் ஸ்டீவ் வாட்ஸ். ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் கிடாரிஸ்ட். “இது எதுக்குமே நான் காரணமில்லை. கடவுள் மிகப் பெரியவன். எல்லாம் அவன் செயல்”. – ஆகாயம் காட்டிப் பேச ஆரம்பிக்கிறார் ஸ்டீவ்.
“சங்கீதத்தோட கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத குடும்பம். மாடி வீட்ல ஒரு கிறிஸ்தவக் குடும்பம். பிரேயருக்காக கிடார் வாசிச்சிட்டு பாடுவாங்க. அதைப் பார்த்துட்டு ஆறாவது படிக்கிறப்பவே கிடார் வாசிக்கணும்னு ஆசை. எதேச்சையா மைக்கேல் ஜாக்சனோட ஆல்பம் கேட்கற வாய்ப்பு கிடைச்சது. வான் ஹேலர்னு ஒரு கிடாரிஸ்ட் கிழிகிழினு கிழிச்சிருந்த அந்த மியூசிக் என்னை என்னவோ செஞ்சது. அடுத்தடுத்து நிறைய ராக் மியூசிக் கேசட் கேட்க ஆரம்பிச்சேன்.மாடி வீட்டுக்காரங்களோட கிடாரை வாங்கிட்டு வந்து, நானாவே வாசிக்க ஆரம்பிச்சேன்.
சொன்னா நம்ப மாட்டீங்க… அதுவரை கிடாரையே தொடாத எனக்கு, அவ்ளோ தத்ரூபமா கைகள் கிடார்ல போய் உட்கார்ந்தது. வாசிக்க ஆரம்பிச்சேன். இதெல்லாம் கிடார்ல வர்ற சவுண்டானு நான் பிரமிச்ச பலதும், நான் வாசிக்க வாசிக்க பிடிபட்டது. முறைப்படி டீச்சரே இல்லாம, நானாவே என்னைத் தயார்படுத்திக்கிட்டேன்.
ஸ்டேஜ்ல சோலோ புரோகிராம் பண்ற அளவுக்கு வளர்ந்தேன். இது எல்லாத்துக்கும் காரணம் கடவுள். எனக்கு இசையைக் கொடுத்த அந்தக் கடவுளுக்கு நான் ஏதாவது திரும்பச் செய்யணும்னு நினைச்சேன். நான் நம்பின ஏசுவோட புகழைப் பாட மட்டும் என் இசையைப் பயன்படுத்திக்கிட்டிருந்தேன். சரவண பவன்ல சாப்பாடு நல்லாருக்கும்னு நாலு பேருக்குச் சொல்ற மாதிரி, ‘ஏசுகிட்ட வாங்க, உங்க பிரச்னையெல்லாம் போகும்’னு சொல்ல மட்டும்தான் அதுவரைக்கும் என் இசை…
சினிமான்னா அலர்ஜி. சினிமா ஆசைல திரியறவங்களைத் திட்டுவேன். இந்தக் கட்டத்துலதான் கடவுள் மறுபடி எனக்குள்ள வந்து, ‘நீ என்னைப் பத்திப் பேசினது போதும்னு சொல்லி, சினிமாவுக்குப் போகச் சொல்லி சிக்னல் தந்தார். கிடாரை தொட்ட நாள்ல இருந்து எனக்கு அவர்சொன்னதுதான் வேத வாக்கு. அவர் சொன்னபடியே, என்னோட டெமோ சிடியை எடுத்துக்கிட்டுப் போய் ஹாரிஸ் ஜெயராஜ் ஓபிஸ்ல கொடுத்துட்டு வந்தேன்.
மூணுமாசமாச்சு… ஒரு தகவலும் இல்லை. சினிமா சான்ஸும் கிடைக்கலை. கடவுள் புகழ் பாடறதையும் நிறுத்தியாச்சு. அடுத்து என்னங்கிற குழப்பத்துல, பெங்களூருவுக்கு போறதுனு முடிவு பண்ணினேன். தெரிஞ் சவங்களுக்கு எல்லாம் தகவல் சொல்லிடறதுனு போனை எடுத்து டயல் பண்றேன்… அந்தப் பக்கத்துலேர்ந்து எனக்கு இன்கமிங் கால். ஹாரிஸ் ஸ்டூடியோலேர்ந்து உடனே வரச் சொல்லிக் கூப்பிடறாங்க. போனா… ‘பீமா’ படத்துல ‘ஒரு முகமோ…’ பாட்டுக்கு வாசிக்கிற வாய்ப்பு. பாட்டு செம ஹிட். கிடாரிஸ்ட் யாருனு கேட்காத ஆளே இல்லை. அப்படியே வரிசையா ஹாரிஸ் படங்கள் அத்தனைக்கும் வாசிச்சாச்சு, ‘வாரணம் ஆயிரம்’ வரை!” ஆரம்பித்த இடத்துக்கு வந்து நிற்கிறது ஸ்டீவின் பேச்சு.
‘வாரணம் ஆயிரம்’ பாடல்களுக்கு கிடார் வாசித்தது மட்டுமின்றி, கிடார் பிளேயராக வரும் சூர்யாவுக்கு அதை சொல்லிக் கொடுத்தவரும் ஸ்டீவ்தான். “சில அடிப்படை விஷயங்களைக் கத்துக் கொடுத்தேன். சூர்யா அருமையா கத்துக்கிட்டார். படத்துல சூர்யா கிடார் வாசிக்கிற மாதிரி சீன் வரும். அதுல க்ளோசப்ல காட்டறகை என்னோடதுதான்.
இந்தப் படத்துல இன்னொரு சிறப்பான விஷயம் என்னன்னா, என் ஸ்டைல்ல வாசிக்க சுதந்திரம் கொடுத்தார் ஹாரிஸ். அதுதான் ’நெஞ்சுக்குள் பெய்திடும்… பாட்டு” என்கிற ஸ்டீவ், அடுத்து சூர்யா – ஹாரிஸ் காம்பினேஷனனில் ‘அயன்’ படத்திலும் வாசிக்கிறார். இன்று முன்னணி இசையமைப்பாளர்கள் அத்தனை பேரும் தேடும் முக்கியப் புள்ளி இவர்.
“ஏ. ஆர். ரஹ்மானை பத்தி சொல்லியே அகனும். அவர்கூட லைவ் ஸ்டேஜ்ஷோ பண்ணிருக்கேன். முதல் முறை நான் அவரைச் சந்திச்சதே மேடைலதான். தன்கூட புரோகிராம் பண்ணப் போறவங்களை ஆடிஷன் பண்ணாம, செலக்ட் பண்ணதே இல்லை ரஹ்மான். முதல் முறையா, ஆடிஷன் இல்லாம, அவர்கூட புரோகிராம் பண்ண ஒரே நபர் நான்தான். அந்தப் புகழும் நான் நம்பற கடவுளுக்கே…” – சிலாகிக்கிற ஸ்டீவுக்கு
இசையமைக்கிற ஆர்வம் உண்டா?
“சொன்னா சிரிப்பீங்க… என் கடவுள் ஒருநாள் வருவார். வந்து அதையும் செய்யச்சொல்லுவார். அதுக்கான சரியான ஆட்கள் முன்னால கொண்டு போய் நிறுத்துவார். அப்ப கண்டிப்பா செய்வேன். ஏன்னா கடவுள் வாக்குதான் எனக்கு வேதவாக்கு” சிலிர்த்து நிறுத்துகிறார் ஸ்டீவ்.

