
நவம் என்றால் 9. இது சக்தியும் ஆதிக்கமும் கொண்ட எண். நவகிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள் என ஒன்பதின் முக்கியத்துவத்தை நாம் அறிவோம்.
சக்தி வடிவமாகிய அம்பாளுக்கு பல உற்சவங்கள் உண்டென்றாலும் வீட்டிலும் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை நவராத்திரிதான். புரட்டாதி மாதம் சூரியன் கன்னி ராசியில் இருக்கும்போது அமாவாசையில் இருந்து வளர்பிறையில் 9 இரவுகளுடன் கூடுதலாக ஒருநாள் தசமி திதியையும் சேர்த்து நவராத்திரி என்றும் தசரா என்றும் பல்லாண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது.
அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகளை ஜோதிட சாஸ்திரப்படி முக்கிய சுபகாரியங்களுக்கு விலக்கி வைக்கிறோம். அந்த இரண்டு திதிகளை சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறைவனின் அம்சம் உள்ளது என்பதை புரிய வைப்பதற்காகவுமே நவராத்திரியில் அஷ்டமி, நவமி, திதிக்கு முக்கியத்துவம் அளித்து, கடைசி நாளான தசமி திதியில் ‘விஜயதசமி’ கொண்டாடி நிறைவு செய்கிறோம்.
நவராத்திரி வழிபாட்டில் முதல் மூன்று நாட்கள் இச்சா சக்தியாகிய துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் கிரியா சக்தியாகிய லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் ஞான சக்தியாகிய சரஸ்வதியையும் வழிபடுகிறோம்.
அஷ்டமி அன்று தீய சக்திகளை அழிப்பதற்காக காளி, நீலி, சூரி என்று பயங்கர தோற்றத்துடன் அருள்பாலிக்கும் சக்தி அம்சத்தை வணங்கும் நாள். துர்க்கை அம்மன், பிரத்யங்கரா தேவி, இந்திராணி, சாமுண்டி போன்ற தெய்வங்களை வழிபடுவதன் மூலம் நம் இல்லத்தில் உள்ள தீய சக்திகள், ஏவல், பில்லி, சூனியம், வாஸ்து குறைபாடுகள் போன்றவை நீங்கி சுபிட்சம் பெருகும்.
நவமி நாள்தான் மகாநவமி. அன்றைய தினம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் சிறந்து விளங்க பிரார்த்தித்து நூல்கள், பேனா, பென்சில், இசைக்கருவிகள் போன்றவற்றை சரஸ்வதி முன் வைத்து பூஜிக்க வேண்டும். நலங்கள், வளங்கள் பெருகுவதற்காக அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்களில் இருக்கும் அனைத்து தளவாடங்கள், கருவிகள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்பட பயன்தரும் அனைத்துக்கும் சந்தனம், குங்குமம், பூ வைத்து, பூஜைகள் செய்து வழிபடுவது மகா நவமியின் சிறப்பு.
மற்ற மாதங்களில் வரும் தசமி திதி சிறப்புமிக்கதாக இருந்தாலும், நவராத்திரிக்கு அடுத்த நாள் வரும் தசமி, விஜய தசமி என்று போற்றப்பட்டுகிறது. சகல காரிய வெற்றிகளையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் ஒருங்கே வாரி வழங்கக்கூடிய நாள். இந்த நாள் சரஸ்வதி தேவிக்கு மிகவும் உகந்த நாளாகும். கல்வி, இசை மற்றும் கலைகள் கற்கவும், புதுக்கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்களுக்கும் சிறப்பானதானது. விஜயதசமியில் தொடங்கப்படும் கல்வி, கலைகள், புதிய தொழில்கள் எல்லாம் விருத்தியடையும் என்பது ஐதீகம்.
நவராத்திரி ஒன்பது நாளும் பெண்களுக்கு உண்டான முக்கிய பண்டிகையாகும். அவரவர் வசதிக்கேற்ப, குடும்ப வழக்கப்படி 1, 3, 5, 7, 9, 11 என்ற அளவில் கொலு படிகள் அமைத்து, பொம்மைகளை அடுக்கி சுற்றம் சூழ மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வது சிறப்பு. வந்தவர்களுக்கு சுண்டல், சர்க்கரை பொங்கல், இனிப்பு வகைகள், ஜாக்கெட் பிட், பழங்கள், பூ, மஞ்சள், தேங்காய் என மங்கல பொருட்களை கொடுத்து உபசரித்து அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறுவதே இந்த வழிபாட்டின் தத்துவம். ஜோதிட சாஸ்திரப்படி, கொலு வைத்து நவராத்திரி விரத பூஜையை செய்வது சுபகாரியத் தடைகள், குழந்தை பாக்கியத் தடை, இனம்புரியாத கவலைகள், பயம் போன்ற தீய சக்திகள் அனைத்தையும் நீக்கி வீட்டில் மகிழ்ச்சியையும் சகல வளங்களையும் அள்ளித் தரும்.
என்று? எப்போது?
நவராத்திரி ஆரம்பம் – அக்டோபர் 8 வெள்ளிக்கிழமை
காளியஷ்டமி என்ற துர்க்காஷ்டமி – அக்டோபர் 15 வெள்ளி
சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை – அக்டோபர் 16 சனி.
பூஜைக்கு உகந்த நேரம் – காலை 10.30-1 மணி, மாலை 5-6 மணி.
விஜயதசமி – அக்டோபர் 17 ஞாயிறு.
பூஜைக்கு உகந்த நேரம் – அதிகாலை 5.30-6.30 மணி

