மந்திரப் புன்னகை

Mandhira Punnahai - Cinema Review

நடிகர் அவதாரம் எடுத்திருக்கும் இயக்குனர்கள் வரிசையில் ‘மந்திரப் புன்னகை’ மூலம் கரு.பழனியப்பனும்! நான்கு படங்களை இயக்கியிருக்கிற பழனியப்பன், ஐந்தாவது படமான ‘ம.பு’வில் தன்னையே ஹீரோவாக்கி பார்க்கத் துணிந்திருக்கிறார். கதைப்படி அந்த ஹீரோ கேரக்டருக்கு கச்சிதத் தோற்றம் என்றாலும், நடிப்பில் செயற்கைத்தனம் பளிச்சிடுகிறது.

குடி, சிகரெட், பெண்கள் என அத்தனை கெட்டப் பழக்கங்களிலும் மூழ்கி, தனக்கென ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு, அதற்குள் யாரையும் நெருங்க விடாமல் வாழ்கிற ஆர்கிடெக்ட் கதிர் (கரு. பழனியப்பன்). அன்பு, பாசம், காதல் என எதற்கும் கட்டுப்படாத அவனது வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள் நந்தினி (மீனாட்சி). தொழில் ரீதியாக சந்திக்கிறவர்கள், நட்பாகி, ஒரு கட்டத்தில் காதலர்களாகி, கல்யாணம் செய்கிற முடிவுக்கு வருகிறார்கள்.

Mandhira Punnahai - Cinema Review

இப்படியொரு அயோக்கியனைக் கல்யாணம் முடிக்க சம்மதிக்கிற பெண், நிச்சயமாக கேரக்டர் சரியில்லாதவளாகத்தான் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லி, மகனின் முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்கிறார் கதிரின் அப்பா. அதையடுத்து அவன் பார்க்கிற விஷயங்கள், கதையை வித்தியாசமான கோணத்தில் நகர்த்த, விறுவிறுப்பாகப் போகிறது க்ளைமாக்ஸ்.

கரு.பழனியப்பனின் படங்கள் பெரும்பாலும் குடும்பக்கதைகளாகவே இருக்கும். அந்த இமேஜிலிருந்து வேறுபட்டு வந்திருக்கிறது ‘ம.பு’. படத்துக்கு மிகப் பெரிய பிளஸ் பாஸ்கர் சக்தியின் வசனங்கள். ஒவ்வொரு வசனமும் நறுக்…

நாயகி மீனாட்சி அழகாக வந்து போகிறார். நடிப்பில் இன்னும் மெச்சூரிட்டி வேண்டும் மேடம். சந்தானத்தின் காமெடி, பத்தோடு ஒன்று! ஸ்டைலை கொஞ்சம் மாத்துங்க மிஸ்டர் சந்தானம்.

Mandhira Punnagai - Cinema Review

தாடியும் கண்ணாடியுமாக தனது கரடு, முரடான தோற்றம் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்த இயக்குனர், அதை சரியாகச் செய்யத் தவறிவிட்டார். நடிகர் அவதாரம் எடுக்கும் அனேக இயக்குனர்களுக்கும் இந்த ஓவர் கான்ஃபிடன்ஸ் இருக்கவே செய்கிறது.

வித்யாசாகரின் இசையில் அறிவுமதியின் வரிகளில் ‘இந்தக் காதல் கொள்ள…’ மட்டுமே ஒன்ஸ்மோர் ரகம். கேமரா, எடிட்டிங் என எல்லாமே ரொம்ப சுமார்.

மந்திரப் புன்னகையில் புன்னகை மிஸ்ஸிங்!

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions