ஏப்ரல் 29 அன்று படப்பிடிப்பில் ரஜினிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு என்ன பிரச்சனை என்பதைச் சொல்லாமல் மூடி மறைத்தனர் அவரது குடும்பத்தினர்.
இசபெல்லா மருத்துவமனையில் இருமுறையும், இப்போது ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு மாத காலமாகவே ரஜினி உடல்நலக் குறைவுடன் உள்ளார்.
மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு முன்பே, ரஜினிகாந்துக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை, ஆரம்ப நிலை சர்க்கரை நோய் ஆகியவை இருந்துள்ளன. உரிய சிகிச்சை எடுக்காமல் இருந்ததால், சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன.
சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாக அவருக்கு ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட சிகிச்சைக்காக லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்வார் என்று முன்பு தகவல் வெளியானது.
அவர் எந்த நாட்டுக்கு செல்கிறார் எப்போது கிளம்புகிறார் என்று எந்தவித தகவல்களை மருத்துவமனை நிர்வாகமோ அவருடைய குடும்பத்தினரோ கூறவில்லை.
ரஜினிகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் தகவல் வெளியானதும், ரசிகர்கள் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்து குவிந்தார்கள். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ரஜினிகாந்தை பார்ப்பதற்காக முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது வந்து கொண்டிருப்பதால், மற்ற நோயாளிகள் அதை தொந்தரவாக கருதக்கூடாது என்பதற்காக, 7-வது மாடிக்கு செல்லும் வழி மாற்றப்பட்டுள்ளது. அவருடைய உறவினர்களும், முக்கிய பிரமுகர்களும் பின்பக்க வாசல் வழியாக அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இந்நிலையில் வெள்ளி இரவு 11 மணிக்கு மேல் ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்ல இருக்கிறார். மனைவி லதாவும் மகள் ஐஸ்வர்யாவும் உடன் செல்கிறார்கள்.
இச்சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது 6 மாதங்களுக்கு ரஜினி ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இந்தக் கால அளவு கூடுமே தவிர குறைய வாய்ப்பில்லை. இதனால் ராணா படம் கைவிடப்படவே சாத்தியம் அதிகமுள்ளது. அப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.

