
இதுவரை ஆக்ஷன், அதிரடி, அடிதடி படங்களையே கொடுத்த எஸ்.ஏ.சந்திரசேகரிடமிருந்து முதல் முறையாக ஒரு காதல் கதை.
தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்து பார்த்து வருகிற அரதப் பழசான கருதான். அதையே இன்னொரு முறை வெளுத்துக் கட்டியிருக்கிறார் இயக்குனர் சேனாபதி மகன்.
சிங்கம்பட்டியை சேர்ந்த கதிரும், அருந்ததியும் பால்ய பருவத்து காதலர்கள். வளர்ந்து, வாலிபர்களான பிறகும்கூட அந்தக் காதல் தொடர்கிறது. வேலை, வெட்டி எதுவுமின்றி வெட்டியாகத் திரிகிற கதிரை, அருந்ததி கல்யாணம் செய்வதை எதிர்க்கிறது அருந்ததி குடும்பம். பொங்கி எழுகிற அருந்ததி, அப்பா&அம்மா ஏற்றுக் கொள்கிற பணக்கார மருமகனாகத் திரும்பி வா எனக் காதலனை அனுப்பி வைக்கிறார். காதலி பேச்சை வேதவாக்காகக் கொண்டு, கஷ்டப் பட்டு உழைத்து, சம்பாதித்த பணத்துடன் ஊருக்குத் திரும்புகிறார் கதிர். அங்கே அருந்ததியின் நிலை வேறு மாதிரி இருக்கிறது. காதலர்கள் சேர்ந்தார்களா என்பதே கிளைமாக்ஸ்.
பல படங்களில் பார்த்த கதை என்பதாலோ என்னவோ, நடிப்பு, வசனம், காட்சிகள் எனப் பலதும் ஏற்கனவே பார்த்த மாதிரியே உறுத்துகின்றன. புதுமுகங்கள் கதிரும், அருந்ததியும் கொடுத்த கேரக்டரை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
காதலி சொல்லிவிட்டாள் என்பதற்காக காதலன் அருவியிலிருந்து குதிப்பதும், அவனைக் காணாமல் காதலி பதறுவதும், அவன் திரும்ப வந்ததும் காதல் பொங்க அவனைச் செல்லமாகக் கோபிப்பதும்…. இன்னும் எத்தனை படங்களில்தான் இதையே பார்ப்பது-?
தன்னைப் பெண் பார்க்க வருகிற மாப்பிள்ளையிடம் வெளிப்படையாகப் பேசும் போதும், வில்லனுடன் போராடும் காட்சியிலும் அருந்ததியின் நடிப்பும், வசனமும் அசத்தல்.
பரணியின் இசையில் ஒன்றிரண்டு பாடல்களில் கிராமத்து மண் வாசம்! சுகுமாரின் ஒளிப்பதிவு கச்சிதம்.
காதலையும், அடிதடியையும் விட்டால் கிராமத்தைப் பற்றிப் பேச வேறு விஷயங்களே இல்லை என நினைத்துவிட்டார்கள் போல. புதுசாக ஒன்றும் இல்லை படத்தில்.
அரைகுறையாக வெளுத்துக் கட்டியிருக்கிறார்கள்!

