
‘பசங்க’ படத்தின் மூலம் வயது வித்யாசமின்றி ரசிகர்களை ஈர்த்த இயக்குனர் பாண்டிராஜின் அடுத்த படம் என்பதால் ‘வம்சம்’ மீதும் ஏகப் பட்ட எதிர்பார்ப்பு. முதல் படம் அளவுக்கு இல்லை என்றாலும், இதுவும் நல்ல படமே!
புலிவதனம், சிங்கம்பிடரி என இரண்டு கிராமங்கள். வருடந்தோறும் இங்கே நடக்கிற 15 நாள் திருவிழா மிகப் பிரபலம். திருவிழாவில் நடக்கிற அத்தனை விளையாட்டு மற்றும் சண்டைகளிலும் ஜெயிப்பவர் ஹீரோவின் அப்பாவும், ரவுடியுமான கிஷோர். அவரிடம் தோற்றுப் போகிற ஊர் பெரிய மனிதர் ஜெயப்பிரகாஷ். அவமானத்தில், சாராயத்தில் விஷம் கலந்து கிஷோரை கொல்கிறார். கிஷோரின் மனைவி, தன் மகன் அருள்நிதியுடன், அந்த ஊரைவிட்டு ஒதுங்கி வாழ்கிறார். கணவரின் ரவுடித் தனம் மகனுக்கும் வரக்கூடாது என்பதற்காக அவர் அப்படியொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாலும், கடைசியில் மகனுக்கும் அதுவே தலையெழுத்தாகிறது.
அருள்நிதிக்கு பக்கத்து ஊர் பெண் சுனேனா மீது காதல். இதற்கிடையில் சுனேனாவின் அப்பாவை ஒரு விரோதத்தில் கொன்று விடுகிறார் ஜெயப்பிரகாஷ். அது தாங்காமல் ஜெயப்பிரகாஷை பழி வாங்கத் துடிக்கிற சுனேனா, ஊர் பெரியவரான ஜெயப்பிரகாஷ் மீது, சாணியைக் கரைத்து ஊற்றி, அடித்துக் காறித் துப்புகிறார். அந்த அவமானத்தில் காதலர்களைப் பழி வாங்கக் கிளம்புகிறார் ஜெயப்பிரகாஷ். வில்லன் வீழ்வதும், காதலர்கள் சேர்வதும் தானே தமிழ் சினிமாவின் ஆண்டாண்டு கால இலக்கணம். அதுவே இந்தப் படத்தின் கிளைமாக்ஸாகவும் அமைகிறது.
பலமுறை பார்த்துப் பார்த்து அலுத்துப் போன வழக்கமான கிராமத்துக் கதையாக இல்லாமல், இதை வித்யாசமாகக் கொண்டு போனதற்காக இயக்குனருக்கு கை கொடுக்கலாம். கிராமத்து திருவிழா காட்சிகளாகட்டும், ஹீரோவும், ஹீரோயினும் பசுமாட்டுக்கு அசின் எனப் பெயர் வைத்து அழைப்பதைப் பார்த்து, கஞ்சா கருப்பு, தன் பூனைக்கு த்ரிஷா எனப் பெயர் வைத்து அடிக்கிற கூத்தாகட்டும், செல்ஃபோன் சிக்னல் கிடைக்காமல், மரத்தில் ஏறி நிற்கிற காட்சியாகட்டும்….. பல காட்சிகளில் முத்திரை பதிக்கிறார் இயக்குனர்.
ஹீரோ அருள்நிதிக்கு இது முதல் படம் மாதிரியே தெரியவில்லை. அம்மாவுக்கு அடங்கிய மகனாக, காதலியிடம் உருக்கும் காதலனாக… எல்லா இடங்களிலும் நிறைவாகச் செய்து, கைதட்டல்களை அள்ளுகிறார். ஹீரோயின் சுனேனாவுக்கும் இது வித்யாசமான படம். வழித்துச் சீவிய கூந்தல், பாவாடை, தாவணியில் அச்சு அசல் கிராமத்து தேவதை.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, கிராமத்தை கண் முன் நிறுத்துகிறது. தாஜ்நூரின் இசை ஓ.கே ரகம்.
சாதி நெடியை மட்டும் கொஞ்சம் குறைத்திருந்தால், வம்சம் இன்னும் வளர்ந்திருக்குமோ…!

