
டி.வி சீரியல் ஒன்றின் நூற்றுக்கணக்கான எபிசோடுகளை ஒன்றாகச் சேர்த்து 3 மணி நேரப் படமாகப் பார்த்தால் எப்படியிருக்கும்-? ‘உத்தமபுத்திரன்’ அப்படித்தான் இருக்கிறது! தீபாவளிப் படங்களிலேயே குடும்பத்துடன் சேர்ந்து ரசிக்கக்கூடிய, காமெடியான படம் என பெருமையடித்துக் கொண்ட உத்தமபுத்திரன், தானும் ஏமாந்து, ரசிகர்களையும் ஏமாற்றியிருக்கிறான்.
‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தின் பார்ட் 2 பார்த்த மாதிரி ஒரு உணர்வு. அதே ஜெனிலியா… அதே மாதிரி நட்சத்திரப் பட்டாளம்… கிட்டத்தட்ட அதே மாதிரி கதைக்களம்… தெலுங்கில் சக்கை போடு போட்ட ‘ரெடி’ படத்தின் ரீமேக்காம்! தமிழில் முடிந்தவரை சொதப்பியிருக்கிறார்கள்.

ஜெனிலியாவுக்கு விருப்பமின்றி நடக்கவிருக்கிற கல்யாணத்திலிருந்து அவரைக் காப்பாற்றுகிறார் நாயகன் தனுஷ். தன்னை ஒதுக்கியே வைத்திருக்கும் தன் குடும்பத்துக்குள்ளேயே ஜெனிலியாவை கொண்டு வந்து சேர்க்கிறார். தன்னுடைய பேச்சாலும் நடவடிக்கைகளாலும், தனுஷ் குடும்பத்தாரை ஈர்க்கிறார் ஜெனிலியா. அவர்தான் வீட்டின் மருமகள் என எல்லாரும் முடிவெடுக்கிறார்கள். இந்த நிலையில், தனது மகன்களுக்கு ஜெனிலியாவை திருமணம் செய்யத் துடிக்கிறார்கள் ஜெனிலியாவின் 2 மாமாக்களும். ஒரு மாமா, ஜெனிலியாவை தூக்கியே செல்கிறார். இரண்டு மாமாக்களின் குடும்பங்களுக்கும் விவேக்தான் ஆடிட்டர். அவரின் துணையோடு, அவருக்கு உதவியாளராகச் செல்கிறார் தனுஷ். காதலர்கள் இணைந்தார்களா என்பதே கிளைமாக்ஸ்!
கே.பாக்யராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, ரேகா, ராஜலட்சுமி, விவேக் என படம் நெடுக நட்சத்திரப் பட்டாளங்கள். பாக்யராஜை தவிர வேறு யார் நடிப்பும் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. தனுஷ், விவேக் உள்பட, எல்லாரும் ஏனோதானோ என்று நடித்த மாதிரியே இருக்கிறது. தனது முந்தைய படங்களின் சாயல் தெரியக்கூடாது என்பதற்காக ஜெனிலியா பாவம் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். அது அப்பட்டமாக அப்படியே அவரது கேரக்டரில் பிரதிபலிக்கிறது.

‘படிக்காதவன்’ படத்தில் காமெடி ரகளை செய்த விவேக்&தனுஷ் கூட்டணி, இந்தப் படத்தில் மருந்துக்குக் கூட சிரிக்க வைக்கவில்லை. விஜய் ஆன்டனியின் இசையில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட ரகம்! முந்தைய படங்களின் வெற்றி அடுத்தடுத்த படங்களிலும் தொடரும் என்கிற நம்பிக்கையில் இணைகிற பலரும், இப்படித்தான் ஏமாந்து போகிறார்கள். தனுஷ்&இயக்குனர் மித்ரன் ஜவஹர் கூட்டணியும் அப்படித்தான்!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை புஸ்வாணமாக்கிவிட்டான் உத்தமபுத்திரன்!

