
வயிற்றுவலிக்கான மாத்திரையுடன் தியேட்டருக்கு வாருங்கள் என விளம்பரம் செய்கிறார்கள் தமிழ்ப்படத்துக்கு. உண்மைதான். காமெடி சேனல்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு நான்ஸ்டாப் நான்சென்ஸ் காமெடியால் நிரம்பி வழிகிறது படம். காட்சிக்குக் காட்சி சிரிப்பு… பல தமிழ்ப்படங்களில் பார்த்து சலித்த அபத்தங்கள், பஞ்ச் டயலாக்குகள், பறந்து பறந்து அடிக்கிற சண்டைக்காட்சிகள் என படம் முழுக்க படங்களைப் பற்றிய கிண்டலும் கேலியும்தான். இப்படியொரு துணிச்சலான முயற்சியைத் தொட்டதற்காக இயக்குனர் அமுதனையும் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியையும் பாராட்டலாம்.

அந்த கிராமத்தில் ஆண் குழந்தைகளைப் பெற்று வளர்க்கத் தடை. ஹீரோ சிவாவின் அம்மாவுக்குப் பிரசவமாகிற காட்சியில் தொடங்குகிறது படம். ஆண் குழந்தை என்பதால் அதைக் கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லச் சொல்கிறது நாட்டாமை தீர்ப்பு. அதற்கு மனமின்றி, குழந்தையை கூட்ஸ் ரயிலில் போட்டு அனுப்பச் சொல்கிறது குழந்தை. கூட்ஸ் வண்டி எதற்கு-? கூட்ஸ் வண்டிகள் எல்லாம் சென்னையை நோக்கியே செல்லுமாம் தமிழ் சினிமாக்களில். அந்தக் குழந்தையின் லட்சியத்தை நிறைவேற்ற, அதைத் தூக்கிக்கொண்டு சென்னைக்கு வருகிறார் அதன் பாட்டி. குழந்தையை சைக்கிளில் ஏறி மிதிக்கச் சொல்கிறாள் பாட்டி. சைக்கிள் சக்கரம் சுழன்று முடிக்கும் முன் அவன் பெரியவனாகி விடுவானாம். அப்படியே நடக்கிறது. வளர்ந்து பெரியவனாகி, காலேஜ் போகும் அவனுக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா & மூவரும் கல்லூரித் தோழர்கள். 40 பிளஸ் தாண்டிய பிறகும் நம்ம ஹீரோக்கள் காலேஜ் ஸ்டூடண்ட்டாக நடிக்கத் தயங்குவதில்லை என்பதை நெற்றியடியாகச் சொல்கிறது இது.
‘போக்கிரி’, ‘திருப்பாச்சி’ விஜய், ‘அபூர்வ சகோதரர்கள்’ கமல் பாணியில் ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறார் ஹீரோ சிவா.
இந்நிலையில் திஷாவுடன் சிவாவுக்கு காதல். ‘காதலுக்கு மரியாதை’ விஜய் பாணியில் காதல் பூக்கிறது அவருக்கு. அதை ‘மவுனராகம்’ கார்த்திக் ஸ்டைலில் சொல்கிறார். ஹீரோ ஏழை என்பதாலும், அப்பா பெயர் தெரியாதவர் என்பதாலும், காதலியின் அப்பா மறுக்கிறார். உடனே திடீர் பணக்காரனாகி, தன் தந்தையையும் கண்டுபிடிக்கிறார் ஹீரோ. காதல் ஜெயிக்கிறது.

தன் அப்பாவைத் தேடி சினிமாப்பட்டி கிராமத்துக்குப் போகிறார் சிவா. அங்கே ‘வைதேகி காத்திருந்தாள்’ விஜய்காந்த் பாணியில் ‘நேத்து ராத்திரி யம்மா’ கேட்டுவிட்டுத்தான் தூங்கப் போகிறார்கள் மக்கள். சீரியல்பட்டி, தங்கச்சிப்பட்டி, சென்டிமென்ட்பட்டி என பல கிராமங்களில் தேடியும் தன் அப்பாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை ஹீரோவால். கடைசியில் அவருக்கு ஒரு சிடி கிடைக்கிறது. அந்தக் குடும்பப் பாடலை ஒலிக்கச்செய்கிற போது காணாமல் போன தன் அப்பா மற்றும் தங்கையுடன் இணைகிறார். அடுத்து ரவுடிகள் ராஜ்ஜியத்தை அழிக்கப் புறப்படுகிறார் சிவா. அந்தக் காட்சிகளும், கிளைமாக்ஸும் நான்ஸ்டாப் சிரிப்பு வெடிகள்…
இசை கண்ணனாம். அர்த்தமே இல்லாமல் பல பாடல்களில் வந்த வரிகளைக் கோர்த்து அழகான மெலடியாக ‘ஓமஹசீயா…’ கொடுத்ததற்காக அவரைப் பாராட்டலாம். மற்ற பாடல்களும் ஓ.கே. ரகம்.
ஒரு மாறுதலுக்காக தியேட்டருக்கே போய் இந்தப் படத்தைப் பார்க்கலாம் மக்கள். கொடுத்த காசு கட்டாயம் வீணாகாது!


