
‘சுப்ரமணியபுரம்’, ‘பசங்க’, ‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘பூ’…. யதார்த்த கதைகளைத் தாங்கி வரும் படங்களுக்கு பஞ்சமே இல்லை சமீப கால தமிழ் சினிமாவில். அந்த வரிசையில் இன்னும் ஒன்று ‘ரேணிகுன்டா’. மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற யாரும் பார்க்க வேண்டிய படம்!
எதைப் பற்றியும் கவலையில்லாத விடலைப் பையன் சக்தி. அவனது அப்பா சேதுபதிக்கோ, தன் மகனை மிகப் பெரிய இன்ஜினியராக்கி பார்க்க ஆசை. ஒரு கட்டத்தில் மகனுக்கு அந்தளவுக்கு படிப்பு வரவில்லை என்பதை உணர்கிற அப்பா, அவனால் எது முடியுமோ, அதைப் படிக்கச் சொல்லி, சமாதானமடைகிறார். அமைதியாகச் செல்கிற சக்தியின் வாழ்க்கை திடீரென திசை மாறுகிறது. சக்தியின் கண் எதிரிலேயே அவனது பெற்றோர் கொலை செய்யப் படுகிறார்கள். கொலை செய்கிற கதிர், ஏற்கனவே ஒரு கொலைக் குற்றத்தில் ஈடுபட்டவர். அதை நேரடியாகப் பார்த்த சாட்சி, சக்தியின் அப்பா என்கிற காரணத்தினாலேயே அவர் கொல்லப் படுகிறார். பழிவாங்கும் எண்ணத்தில் களமிறங்கும் சக்தி, அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாத காரணத்தினால் பிடிபடுகிறான். 14 நாட்கள் காவலில் வைக்கப் படுகிறான். கூச்ச சுபாவியான சக்தி, ஜெயில் கைதிகளின் தொந்தரவினால் பெரிதும் பாதிக்கப் படுகிறான். அங்கே அவன் டப்பா, பாண்டு உள்ளிட்ட நான்கு இளம் குற்றவாளிகளை சந்திக்கிறான். அவர்களுடன் நட்பு கொள்வதில் சக்திக்கு உடன்பாடில்லை என்றாலும், மற்ற கைதிகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க அவனுக்கு அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அவர்களது அன்பு, அக்கறையால் ஈர்க்கவும் படுகிறான். ஜெயிலில் இருந்து தப்பிக்க திட்டம் போடுகிற அந்த நால்வரும், மெதுவாக சக்தியையும் தங்கள் கிரிமினல் உலகத்துக்குள் இழுத்துக் கொள்கிறார்கள்.

சக்தியின் பின்னணி தெரிந்து அவனது பெற்றோரைக் கொன்ற கதிரைக் கொல்லத் திட்டம் போடுகிறார்கள் நண்பர்கள். கொன்றுவிட்டு, போலீசில் இருந்து தப்பிக்க மும்பைக்கு ரயிலேற நினைக்கிறார்கள். ஆனால் விதி அவர்களை ரேனிகுண்டாவுக்கு இழுத்துச் செல்கிறது. ரேனிகுண்டாவில் சக்திக்கு ஊமைப் பெண் ஒருத்தி அறிமுகமாகிறாள். அவர்களுக்குள் மெல்ல காதல் மலர்கிறது. அந்தப் பெண்ணின் அக்கா கணவன், விபச்சார புரோக்கர். தன் மனைவியையே வைத்து விபச்சாரம் செய்து பிழைப்பு நடத்துகிறவன். தன் தங்கையையும் அவன் அந்தத் தொழிலுக்குள் தள்ளப் போடுகிற திட்டத்தை முறியடிக்க, சக்தியுடன் தனது தங்கையை ஓடிப் போகச் சொல்கிறார் அக்கா. ஓடிப் போக தேதி குறிக்கப் படுகிறது.
இதற்கிடையில் ஒரு லோக்கல் தாதா, தனக்குத் தெரிந்த கான்டிராக்டர் ஒருவரைக் கொலை செய்ய இந்த நண்பர்கள் குழுவை நாடுகிறான். நண்பர்களின் அந்தக் கொலை முயற்சி தோல்வியடைகிறது. சக்தியைத் தவிர அத்தனை பேரும் ஒவ்வொருவராக கொல்லப் படுகிறார்கள். போலீசில் இருந்து தப்பித்து, தனது காதலியுடன் அமைதியான வாழ்க்கையை ஆரம்பிக்கிறானா சக்தி என்பதே கிளைமாக்ஸ்!

வசனம், காட்சிகளின் நீளம், தேவையற்ற காட்சித் திணிப்புகள் என எந்த வகையிலும் படத்தை நீட்டி முழக்காமல் நறுக்கென கொண்டு சென்றதற்காக இயக்குனர் பன்னீர்செல்வத்துக்கு கை கொடுக்கலாம்.
ஜானி, சானுஷா, நிஷாந்த், சந்தீப்… என எல்லாருமே புதுமுக நட்சத்திரங்கள். ஆனாலும் அந்தப் பதற்றமோ, பயமோ இல்லாத இயல்பான நடிப்புக்காக அவர்களையும் பாராட்டியே தீர வேண்டும்.
ரத்தம், அடிதடி… என வன்முறைக்குப் பஞ்சமில்லாத படம்தான் என்றாலும், அவை அத்தனையும் நியாயமாகப் படுவதால், கட்டாயம் பார்க்கலாம். குடும்பத்தோடு அல்ல! குழந்தைகளைத் தவிர்த்து!

