
வரலாற்றுக்கதைகளைக்கூட வெற்றிப் படங்களாகக் கொடுக்கும் தைரியம் கேரள சினிமாவுக்கு உண்டு. அந்த வகையில் லேட்டஸ்ட் ‘பழசிராஜா’.
எம்.டி.வாசுதேவன் நாயரின் எழுத்தில், இதை சுவாரசிய சினிமாவாக இயக்கியிருக்கிறார் ஹரிஹரன். ஆங்கிலேயருக்கு எதிராக நின்று போராட தமிழ்நாட்டுக்கு ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி, கேரளாவுக்கு பழசிராஜா. பழசிராஜாவாக மம்மூட்டி.
கேரளாவுக்கு வர்த்தகம் செய்கிற சாக்கில் உள்ளே நுழைகிற ஆங்கிலேயர்கள், அங்குள்ள குறுநில மன்னர்களிடம் தமது பிரித்தாளும் சூழ்ச்சியை ஆரம்பிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தமது படை பலம், ஆயுத பலத்தின் உதவியோடு, நாடு பிடிக்கத் தொடங்கும் ஆங்கிலேயர்களை எதிர்த்து நிற்கிறார் பழசிராஜா. தமக்கு அடிபணிய மறுக்கும் அவரது அரண்மனையைக் கைப்பற்றிய போதும், எதிர்ப்பைத் தொடர்கிறார் பழசி.

அதையடுத்து தலைமறைவாகிற அவர், ஒரு கட்டத்தில், மலைவாழ் மக்கள் சிலரைத் தனக்கு ஆதரவாகத் திரட்டிக்கொண்டு, மறுபடி ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளம்புகிறார். அவரது எதிர்ப்பை சமாளிக்கத் துணிவில்லாத ஆங்கிலேயர்கள், பழசிராஜாவை ஏமாற்ற ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். போரினால் மக்கள் உயிரிழப்பதைத் தவிர்க்க, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் பழசிராஜா. ஆனால், அது ஆங்கிலேயரின் ஏமாற்று வேலை என உணர்கிற அவர், மீண்டும் போரைத் தொடர்கிறார். பழசிராஜாவின் தளபதிகள் உயிரிழக்கிறார்கள். பழசிராஜா சரணடைந்தால் போரை நிறுத்தத் தயார் என அறிவிக்கிறது ஆங்கிலேய அரசு. ஆங்கிலேயரின் அராஜகம் வென்றதா? பழசிராஜாவின் நேர்மை வென்றதா என்பதே கிளைமாக்ஸ்.
படம் பார்த்தவர்களுக்கு பழசிராஜாவின் கேரக்டரில் மம்மூட்டியை தவிர வேறு யாரையும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. அப்படியோர் பொருத்தம். கட்டபொம்மன் என்றதும் சிவாஜி முகம் நமக்கு நினைவில் வருவதைப் போல, பழசிராஜா என்றால் இனிமேல் மம்மூட்டிதான் தெரிவார். கன்னங்கள் துடிக்க, கண்கள் சிவக்க, ஆஜானுபாகு உடலைக் காட்டி, ஸ்டண்ட் செய்கிற சரத்குமாரா அவர்? மம்மூட்டியின் வீரத் தளபதியாக வருகிறவர், நடிப்பில் நெகிழ வைக்கிறார். இதுபோன்ற கேரக்டர்களில் கவனம் செலுத்தினால் சரத்தின் இமேஜ் கட்டாயம் மாறும்.

கனிகா, பத்மப்ரியா என இரண்டு ஹீரோயின்கள். இருவரும் கேரக்டருக்கு கன கச்சிதம். மம்மூட்டியின் மனைவியாக கனிகா. மலைவாழ் பெண்ணாக பத்மப்ரியா. கனிகாவுக்கு அழுகாச்சி கேரக்டர் என்றால், பத்மப்ரியாவுக்கோ ஆவேச கேரக்டர். மனோஜ் கே.ஜெயன், சுமன், ஜெகதி ஸ்ரீகுமார், திலகன், நெடுமுடி வேணு என யாரும் தனது கேரக்டருக்கு குறை வைக்காமல் திருப்தியாகச் செய்திருப்பது படத்தின் ப்ளஸ்களில் ஒன்று.
இளையராஜாவின் இசை, ராம்நாத் ஷெட்டியின் கேமரா, ஆஸ்கர் புகழ் ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு, முத்துராஜின் கலை அமைப்பு என எல்லாமே கதையை, அது நடந்த 18&ம் நூற்றாண்டுக்கு நம்மையும் அழைத்துச் செல்ல வைக்கின்றன.
வசனம், காட்சிகளில் பிரமாண்டம் போன்றவற்றில் இன்னும் கொஞ்சம் சிரத்தை காட்டியிருக்கலாமோ என்பது மட்டும் லேசான நெருடல். மற்றபடி அழகான பதிவு!

