
சூப்பர் ஸ்டாரின் புதிய படம் வருகிறது என்றால் ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம்தான். இந்த முறை அந்தக் கொண்டாட்டம் கொஞ்சம் அதிகம். காரணம் ரஜினி என்கிற பிரமாண்ட நடிகருடன், ஷங்கர் என்கிற பிரமாண்ட இயக்குனரும், சன் பிக்சர்ஸ் என்கிற பிரமாண்டத் தயாரிப்பாளரும் சேர்ந்து கொண்டதுதான்! போதாத குறைக்கு ஐஸ்வர்யா ராய்!
ரஜினி – ஷங்கர் கூட்டணி வெற்றி பெறும் என்பதற்கு ‘சிவாஜி’யே உதாரணம். அந்த வெற்றியை முந்தி விடும் போல ‘எந்திரன்’.
ரஜினி ரசிகர்களை இந்தப் படம் திருப்திப்படுத்துமா என்பது சந்தேகம்தான். பின்னே… சூப்பர் ஸ்டாருக்கான அதிரடி அறிமுகக் காட்சி இல்லை. ரஜினி ஸ்டைல் பன்ச் டயலாக் இல்லை. பறந்து பறந்து பத்து பேரை அடிக்கிற சாகசங்கள் இல்லை.
ஆனாலும், அந்தக் குறையைப் போக்கும் அளவுக்கு படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடங்கள். விஞ்ஞானியாக வருவதும் அவரே. அவர் உருவாக்கும் ரோபோவும் ரஜினியே!
கதைப்படி ரஜினி, ரோபோடிக்ஸ் விஞ்ஞானி. இந்திய ராணுவத்துக்குப் பயன்ப்டும் வகையில் ரோபோ ஒன்றை உருவாக்கத் தொடங்குகிறார். இதற்கிடையே மருத்துவக்கல்லூரி மாணவி ஐஸ்வர்யாவுக்கும் விஞ்ஞானி ரஜினிக்கும் காதல். ஆராய்ச்சியிலேயே பிசியாக இருப்பதால் இருவருக்கும் இடையே சின்ன ஊடல். பிரிவுத்துயர் வாட்டவே, தான் பாதி உருவாக்கிய ரோபோவை முழு மும்முரத்துடன் முடிக்கிறார் விஞ்ஞானி ரஜினி. அவரது பேராசிரியரான வில்லன் அந்த ரோபோவுக்கு அங்கீகாரம் தர மறுக்கிறார், அதனால் தூண்டப்படும் ரஜினி, மனிதனைப்போலவே சுயசிந்தனை கொண்ட சூப்பர் ரோபோவை உருவாக்குகிறார்.

ஐஸ்வர்யா ராயோடு பழகுகிற வாய்ப்பு அந்த ரோபோவுக்கு ஏற்படுகிறது. ஐஸ்வர்யாவின் அழகில் மயங்கிய அந்த ரோபோவுக்கே ஐஸ் மீது காதல் பிறக்கிறது. ரோபோ ஒருதலையாகத் தன் காதலைத் தொடர்கிறது.
இந்நிலையில் ஹீரோ ரஜினி உருவாக்கியிருக்கிற ரோபோ பற்றிக் கேள்விப்படுகிற வில்லன், எப்படியும் அதைக் கைப்பற்றத் துடிக்கிறார். ரோபோவிடமே அதைப் பற்றி அவர் பேசுகிறார். எடுப்பார் கைப்பிள்ளையான ரோபா அடுத்த நாள் நடக்கிற ராணுவ ஆய்வுக்கூட்டத்தில் ஆயுதச்சண்டை போடுவதற்குப் பதிலாக, காதல் கவிதை படிக்கிறது. கோபமான ரஜினி, தனது ரோபோவை உடைத்து எறிந்துவிடுகிறார்.
குப்பையில் வீசப்பட்ட அந்த ரோபோ தன் சூப்பர் சக்தியால் மறுஉயிர் பெறுகிறது. வில்லன் வசம் போய்ச் சேர்கிறது. அதற்கு மீண்டும் சக்தி அளிப்பதோடு, கொலை, கொள்ளை போன்ற பேரழிவுச் செயல்களுக்குப் பயன்படுத்துகிறார் வில்லன்.

இந்தப் பழியும் ரோபோவை உருவாக்கிய ரஜினி மீதே வந்து சேர்கிறது. ரோபோவின் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயங்களுக்கு ஆளாகிறார். இதற்கிடையே ஐஸ்வர்யா ராயையும் கடத்திச் செல்கிறது ரோபோ. அதோடு, தன்னைப்போலவே நூற்றுக்கணக்கான ரோபோக்களை உருவாக்கி பிரச்னையைப் பூதாகரமாக்குகிறது.
க்ளைமாக்ஸ்… உலக அளவில் இதுவரை பயன்படுத்தாத அளவு அமிமேட்ரானிக்ஸ் காட்சிகளில் ரோபோ ரஜினி பின்னியெடுக்கிறது. அதை எப்படி விஞ்ஞானி ரஜினி கட்டுப்படுத்தி, தான் ஒரிஜினலாக உருவாக்கிய நல்ல ரோபாவாக மாற்றுகிறார், அதன்பின் விஞ்ஞானி ரஜினி மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை ரோபோ எப்படிக் காப்பாற்றுகிறது என்பதையெல்லாம் வெள்ளித்திரையில் காண்க!
ஹீரோ ரஜினியைவிட, ரோபா ரஜினி “சிட்டி” வரும் காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது. ரோபோவாச்சே… அதனால் சிரிக்காமல் அவர் வசனம் பேசுகிறார். ஆனாலும், தியேட்டரில் படம் பார்க்கிறவர்களின் வயிறுகள் சிரிப்பில் பதம் பார்க்கப்படுகின்றன.

ஐஸ்வர்யா ராய், தனது கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். பல வருடங்களுக்கு முன் ‘ஜீன்ஸ்’ படத்தில் பார்த்த அதே அழகும், இளமையும் இப்போதும் அவரிடம். நடிப்பு, நடனம், எக்ஸ்பிரஷன் என எல்லாவற்றிலும், ரஜினிக்கு இணையாக பின்னி எடுக்கிறார். ‘எந்திரன்’ தொடர்பான தனது எல்லா மேடைகளிலும், சமீப காலமாக ரஜினி, ஐஸ்வர்யாவை புகழ்ந்து தள்ளுவது எந்தளவுக்கு உண்மையானது என்பது படத்தைப் பார்த்தால் புரியும்.
வழக்கமான ரஜினி பட பன்ச் டயலாக், ஹீரோயிசம் இதுவும் எந்தப்படத்தில் இல்லை என்பதற்காகவே ரஜினிக்கு ஸ்பெஷல் பாராட்டு!
ரஜினி படங்களில் காமெடியனுக்கு பெரிய வேலை இருக்காது. காமெடியனை மிஞ்சும் அளவுக்கு அந்த வேலையையும் ரஜினியே செய்து விடுவார். இந்தப் படத்திலும் சந்தானம், கருணாஸ் என இருவர் இருந்தும், அவர்களுக்குப் பெரிதாக வேலையில்லை. வி.எம்.சி.ஹனிபாவும் கலாபவன் மணியும் வந்து போகிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்தில் ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். ‘கிளிமஞ்சாரோ…’வும், ‘அரிமா அரிமா’வும், ‘காதல் அணுக்களு’ம் பலரது காலர் டியூனாகின்றன. ரத்னவேலு (ஒளிப்பதிவு), சுஜாதா (கதை, வசனம்), சாபு சிரில் (கலை) என படத்தில் ரஜினி தவிர ஏகப்பட்ட ஹீரோக்கள்…
சன் பிக்சர்ஸ் இந்தப் படத்துக்குக் கொடுக்கிற பப்ளிசிட்டியை பார்த்து, அந்தளவுக்கு அது தகுதியானதுதானா என்கிற கேள்வி பலருக்கும் இருந்ததென்னவோ உண்மைதான். தகுதியானவன்தான் என நிரூபித்திருக்கிறான் ‘எந்திரன்’!

