Aval PeyarThamizharasi

‘சுப்ரமணியபுரம்’ வெற்றிக்குப் பிறகு வரிசை கட்டி ரிலீசாகிற கிராமத்துப் பின்னணி பாணிப் படங்களில் லேட்டஸ்ட் ‘அவள் பெயர் தமிழரசி’. அந்தப் பாணியை அழகாகக் கையாண்டதற்காக இயக்குனர் மீரா கதிரவனை முதலிலேயே பாராட்டலாம்.

கதாநாயகன் ஜோதி (ஜெய்)யை அறிமுகப்படுத்துகிற பின்னணிக்குரலுடன் தொடங்குகிறது படம். அப்படியே பின்னோக்கி நகர்ந்தால் ஜெய்க்கு வயது 10. தாத்தாவுடன் (தியோடர் பாஸ்கரன்) கிராமத்தில் வசிக்கிறார். அந்தக் கிராமமே வானம் பார்த்த பூமியாக மழையின்றி, வறண்டு கிடக்கிறது. அந்த கிராமத்துக்கு கூத்து கட்ட வருகிறது ஒரு கூட்டம். அதில் தமிழரசியும் (நந்தகி) ஒருவர். முதல் பார்வையிலேயே தமிழரசியைப் பிடித்துப் போக, தன் தாத்தாவிடம் சொல்லி, கூத்து கட்ட வந்தவர்களை அங்கேயே தங்கச் சொல்லச் செய்கிறார் ஜோதி.

பிளஸ் டூ வரை இருவரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள். பள்ளிக்கூடத்தை முடிக்கிற தமிழரசிக்கு பூனாவில் ஒரு கல்லூரியில் இடம் கிடைக்கவே இருவரும் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம். அந்தப் பிரிவை கதாநாயகனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைத் தடுத்து நிறுத்த அவர் செய்கிற வேலைகளால், தமிழரசியின் வாழ்க்கையே புரட்டிப் போடப்படுகிறது.

Aval PeyarThamizharasi

கிட்டத்தட்ட 8 வருடங்கள் தமிழரசியைத் தேடி அலைகிறார் ஹீரோ. கண்டுபிடித்தாரா, இருவரும் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

கிளைமாக்ஸை நோக்கி நகரும் காட்சிகள், முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என யூகிக்க வைப்பதால், பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் போகின்றன.

காமெடிக்கு கஞ்சா கருப்பு. ஆனாலும், காட்சிகள் கதையை விட்டு விலகித் தனியே பயணிப்பதால் ரசிக்க முடியவில்லை.

ஜெய் நன்றாகத் தேறியிருக்கிறார் நடிப்பில். அவருக்காகவே செய்த கேரக்டர் மாதிரி இருக்கிறது. நந்தகிக்கு பாவம் யாரும் நடிக்கக் கற்றுக்கொடுக்கவில்லை போல…

வழக்கமான முகங்களைத் தவிர்த்து தியோடர் பாஸ்ரகன், வீர சந்தானம் போன்றவர்களை நடிக்கச் செய்ததற்காக டைரக்டரை இன்னொரு முறை பாராட்டலாம்.

ஆர்ட் டைரக்டர் மூர்த்தி, ஒளிப்பதிவாளர் முத்தையா ஆகியோரின் பங்கும் படத்தில் மகத்தானது.

குத்துப்பாட்டு ஸ்பெஷலிஸ்ட்டான விஜய் ஆண்டனிக்கு, கிராமத்து மெலடியும் பிரமாதமாக வருகிறது.

இரண்டாவது பாதியில் வேகம் ஏற்றி, கிளைமாக்ஸை வித்தியாசமாக யோசித்திருந்தால், பெயரைக் காப்பாற்றியிருக்கலாம்.

Aval PeyarThamizharasi