Angadi Theru

Click here to view gallery

அடுக்கு மாடி ஷாப்பிங் மால்களில் சளைக்காமல் ஏறி, இறங்கி, ஷாப்பிங் செய்த அனுபவம் எல்லாருக்கும் இருக்கும். மணிக்கணக்கில் நின்றபடி, சிரித்த முகம் மாறாமல், எத்தனை பேர், எத்தனை முறை, என்ன கேட்டாலும் முகம் சுளிக்காமல் பதில் சொல்லி, வேலை பார்க்கிற விற்பனைப் பெண்களையும், பையன்களையும் என்றைக்காவது கவனித்திருப்போமா? சோகம் அப்பிய அவர்களது வாழ்க்கையை நெருக்கத்தில் பார்க்க வாய்ப்பளிக்கிறது ‘அங்காடித் தெரு’.

‘வெயில்’ உண்டாக்கிய எதிர்பார்ப்பை ‘அங்காடித் தெரு’வில் பல மடங்கு அதிகமாகவே பூர்த்தி செய்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.

Angadi-Theru-Magesh

திருநெல்வேலியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் ஜோதிலிங்கம் (மகேஷ்). பிளஸ் டூ&வில் முதல் மதிப்பெண் வாங்கியவர். அவரது அப்பா ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி இறந்து போக, குடும்பச்சுமை ஜோதியின் தோள்களில். படிப்பாசையைப் பரணில் போட்டுவிட்டு, சென்னைக்குப் பிழைப்பு தேடிப் புறப்படுகிறார். சென்னையில், ரங்கநாதன் தெருவில், செந்தில்முருகன் துணிக் கடையில் விற்பனையாளராக வேலை கிடைக்கிறது. பெற்றவர்களை இழந்த, பிழைக்க வேறுவழி தெரியாத, முக்கியமாக கடையில் ஏதேனும் பிரச்னை நடந்தாலும் அதைப் பெரிதுபடுத்தி கேள்வி கேட்காத இள வயதுக்காரர்கள் பலரை இப்படி வேலைக்கு எடுத்துக் கொள்கிறது செந்தில்முருகன் ஸ்டோர்ஸ். வேலையாட்களுக்கு சரியான சாப்பாடோ, தங்குமிடமோ கிடையாது. உள்ளே நடக்கும் அக்கிரமங்களை சகித்துக் கொண்டால்தான் வேலை நீடிக்கும் என்கிற நிலையில் கிட்டத்தட்ட எல்லாருக்குமே அடிமை வாழ்க்கை.

அதே கடையில் வேலை பார்ப்பவள் சேர்மக்கனி (அஞ்சலி). ஜோதிலிங்கத்துக்கும் கனிக்கும் மோதலில் ஆரம்பிக்கிற நட்பு, போகப்போக காதலாக மலர்கிறது. இவர்களுக்கு கடையின் சூப்பர்வைசரால் ஏகப் பட்ட தொல்லைகள்… அவரிடமிருந்தும், அடிமைத்தனத்தில் இருந்தும் தப்பிக்க கடையை விட்டு வெளியேறுகிறது காதல் ஜோடி. வெளியேறிய பிறகு நடைபாதையில் வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம்…

Angadi-Theru-Anjali

அடுத்து நடக்கிற விஷயங்கள்… அவர்களுக்கு வாழ்க்கை விடிந்ததா, ஒன்று சேர முடிந்ததா என்பதே கிளைமாக்ஸ்.

மகேஷும் அஞ்சலியும் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்கள். அஞ்சலிக்குள் இப்படியொரு நடிப்புத் திறமையா? சூப்பர்வைசராக வரும் இயக்குனர் வெங்கடேஷ், இனி டைரக்ஷனை விட்டுவிட்டு, முழுநேர நடிகராகி விடலாம். நட்சத்திரங்களின் திறமைக்கு பக்கபலமாக நின்று உதவியிருக்கிறது ஜெயமோகனின் வசனங்கள்.

விஜய் ஆன்டனி & ஜி.வி பிரகாஷ் கூட்டணியில் இசையும் ஓ.கே. ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…’ பாடல் கேட்கக் கேட்கத் திகட்டாத மெலடி.

தினசரி நாம் கடந்து போகிற மனிதர்களின் கதைதான். திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் வசந்தபாலன். திரும்பத் திரும்பப் பார்க்கவும்…