டான்ஸ் மாஸ்டர் நடிகர் இயக்குனர் பிரபுதேவா – நடிகை நயன்தாரா காதல் விவகாரம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி வந்தனர். இதற்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நயன்தாரா வற்புறுத்தலால் அவரை மணக்க முடிவு செய்தார் பிரபுதேவா. மும்பையில் நடந்த ‘உருமி’ பட ஷூட்டிங்கில் நிருபர்களை சந்தித்த பிரபுதேவா, ‘விரைவில் நயன்தாராவை மணப்பேன்’ என்ற பகிரங்கமாக அறிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த ரமலத், சென்னையில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நயன்தாராவிடம் இருந்து பிரபுதேவாவை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோர்ட்டில் ஆஜராகும்படி பிரபுதேவா, நயன்தாரா இருவருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அவர்கள் ஆஜராகாததால் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ரமலத் வழக்கு தொடர்ந்ததில் இருந்தே மூட் அவுட்டில் இருக்கிறார் நயன்தாரா. திருமணத்துக்குத் தயாராகும் விதத்தில் புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்தவர், இப்போது மனம் மாறி புதுப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். என்.டி.பாலகிருஷ்ணாவுடன் ‘ஸ்ரீராமஜெயம்’ என்ற படத்தில் சீதையாக நடிக்கிறார். இதையடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
தற்போது ‘எங்கேயும் காதல்’ என்ற படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார். ஜெயம் ரவி ஜோடியாக புதுமுகம் ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். படப்பிடிப்பின்போது ஹன்சிகாவிடம் மனம் விட்டு பேசினார் பிரபுதேவா. இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. விஷால் நடிக்கும் புதிய படத்தையும் பிரபுதேவா இயக்குகிறார். அதில் விஷால் ஜோடியாக நடிக்க ஹன்சிகாவிடம் கால்ஷீட் கேட்டார். வேறு சில படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் தர இயலாது என்று கூறிவிட்டார்.
இதற்கிடையே, சமீபத்தில் ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் ஹன்சிகாவுக்கு பிரபுதேவா சிறப்பு விருந்து அளித்தார். நயன்தாராவுக்கு தெரிந்த ஒருவர், இதைப் பார்த்து அவருக்கு தகவல் கொடுத்தார். வெளியூரில் இருந்த நயன்தாரா, விமானம் பிடித்து ஹைதராபாத்துக்கு விரைந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற அவர், பிரபுதேவாவிடம் விசாரித்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தின் உச்சிக்கு சென்ற நயன்தாரா, உரத்த குரலில் பிரபுதேவாவை திட்டித் தீர்த்துள்ளார். ‘இன்னொரு நடிகைக்கு நீங்க எப்படி விருந்து தரலாம்’ என்று கேட்டு உலுக்கிவிட்டார். அவரை சமாதானம் செய்ய பிரபுதேவா முயன்றும் முடியவில்லை. இவர்களின் தகராறால் நட்சத்திர ஓட்டலே பரபரப்பானது. இணைபிரியாத காதலர்களாக வலம் வந்த பிரபுதேவா – நயன்தாராவுக்கு இடையே ஏற்பட்டுள்ள திடீர் மோதல் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

