உலகக்கோப்பை கிரிக்கெட்: கென்யாவை சுருட்டியது பாக்

கென்யாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 205 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிதியின் பந்துவீச்சில் நிலைகுலைந்த கென்ய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அப்ரிதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கென்ய அணி 33.1 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அம்பணத்தோட்டத்தில் பிப்ரவரி 23 அன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ஹபீஸ் 9 ரன்களிலும், அகமது ஷெஸாத் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தபோதும், கம்ரான் அக்மல்-யூனிஸ்கான் ஜோடி அணியின் சரிவை தடுத்து நிறுத்தியது.

அக்மல் 55 ரன்களும், யூனுஸ்கான் 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்தது.

இதன்பிறகு வந்த மிஸ்பா உல் ஹக்- உமர் அக்மல் ஜோடி கென்யாவின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது.

அணியின் ஸ்கோர் 273 ரன்களை எட்டியபோது மிஸ்பா 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்சர்கள், 1 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார். 52 பந்துகளைச் சந்தித்த உமர் அக்மல் 1 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது.

கென்யா தரப்பில் ஒடோயோ 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

318 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது கென்யா. தொடக்க ஆட்டக்காரர்கள் மெüரிஸ் அவ்மா 16 ரன்கள், வாட்டர்ஸ் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் ஒபுயா சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார். அவர் 47 ரன்கள் எடுத்திருந்தபோது அப்ரிதியின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க கென்யா சரிவுக்குள்ளானது.

பின்னர் வந்த மிஸ்ரா 6, படேல் 0, கமாண்டே 2, ஒடோயோ, ஒடியாம்போ, கோச்சே ஆகியோர் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க 33.1 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது கென்யா.

பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் அப்ரிதி 8 ஓவர்கள் வீசி 16 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கென்ய பந்துவீச்சாளர்கள் 46 உதிரி ரன்களை வாரி வழங்கினர். இதில் 37 வைடுகளும், 6 நோ பால்களும், 3 லெக் பை ரன்களும் அடங்கும்.

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions