ஜனவரி 4 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் சச்சின் 146 ரன்கள் எடுத்து தனது 51 சதத்தை பதிவு செய்தார். அவரது அபார ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை எடுத்தது. இது சச்சின் டெண்டுல்கரின் 51-வது சதமாகும்.
கம்பீர் 65 ரன்களுடனும், சச்சின் 49 ரன்களுடனும் மூன்றாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் குவித்தனர். விக்கெட்டை வீழ்த்த தென்னாப்பிரிக்க வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் கைகொடுக்கவில்லை.
3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இணைந்து 176 ரன்களை எடுத்தது. சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த கம்பீர் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுகளுக்கு 204 ஆக இருந்தது.
அடுத்து வந்த லட்சுமணும் துரதிருஷ்டவசமாக 15 ரன்களில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து புஜாரா 2 ரன்களிலும், கேப்டன் தோனி ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர்.
முன்னதாக மோர்கல் பந்தில் சிக்ஸர் அடித்து சச்சின் தனது சதத்தை நிறைவு செய்தார். அடுத்து வந்த ஹர்பஜன் சிங், சச்சினுடன் நின்று விளையாடினார். அணியின் ஸ்கோர் 323 ஆக இருந்தபோது 40 ரன்களில் ஹர்பஜன் விக்கெட்டை இழந்தார். அவர் 2 சிக்ஸர்களையும் விளாசினார். அடுத்து ஜாகீர்கான் களம் இறங்கினார்.
தொடர்ந்து நிதானமாக விளையாடிய சச்சின், எதிர்பாராதவிதமாக மோர்கல் பந்தில் போல்டு ஆனார். 2 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் அவர் 146 ரன்களைச் சேர்த்தார்.
அடுத்து வந்த இஷாந்த் சர்மா 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஜாகீர்கான் தனது பங்குக்கு 2 சிக்ஸர்களுடன் 23 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 364 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. ஸ்ரீசாந்த் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவை விட இந்தியா 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தொடர்ந்து தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ûஸ ஆடியது. 3வது நாள் ஆட்டமுடிவில் தென்னாப்பிரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக ஸ்மித்தும், பீட்டர்சனும் களம் இறங்கினர். ஸ்மித் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹாரிஸ் வந்த ரன் ஏதுமின்றி வேகத்தில் வெளியேறினார். இவர்கள் இருவரையும் ஹர்பஜன் சிங் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார். பிட்டர்சன் 22 ரன்களுடனும், ஆம்லா ரன் ஏதும் எடுக்கமாலும் களத்தில் இருந்தனர்.
இந்தியாவை விட தென்னாப்பிரிக்கா 50 ரன் முன்னிலை பெற்றுள்ளது. புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மீதமுள்ள 8 விக்கெட்டுகளையும் இந்திய வீரர்கள் விரைவில் வீழ்த்தினால், வெற்றிக்கு வாய்ப்பு உள்ளது.

